கே.ஆர்.பி. அணையில் இருந்து விநாடிக்கு 7,900 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி. அணையில் இருந்து, விநாடிக்கு 7,900 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கூறியதாவது:
கே.ஆர்.பி. அணையில் இருந்து 7,900 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மணல் மூட்டைகள், ஜேசிபி வாகனம், மரம் அறுக்கும் இயந்திரம், டிராக்டர் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துள்ளோம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.