கொடிய நோய்...
உடலில் கட்டுப்பாடில்லாமல் அதிகமாக பெருகும் செல்கள், ஆரோக்கியமான திசுக்களை அழித்து உடல் முழுவதும் பரவும் கொடிய நோய் தான் கேன்சர். இதனால் நோயாளிக்கு உடல் ரீதியாக மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக குடும்பத்தையே தலைகீழாகவே மாற்றிவிடும்.
தமக்கு புற்றுநோய் வந்துவிட்டது என கண்டறியப்பட்ட நொடியிலிருந்து உயிரை குடிக்கும் ரண வலியுடன் பொருளாதார சிதைவும் சேர்ந்து அந்த நோயாளியை நிழலாக துரத்திக் கொண்டு தான் இருக்கும்.
மத்திய அரசு அதிரடி
அறுவை சிகிச்சை, கிமோதெரபி தொடங்கி பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பல லட்சம் வரை செலவாகும். அதிலும் ஆயிரக்கணக்கில் விற்கும் மருந்துகளை வாங்குவதில் நடுத்தர குடும்பங்களுக்கும், ஏழை எளிய குடும்பங்களுக்கும் திண்டாட்டம் தான். இந்த சூழலில் புற்றுநோயாளிகளின் பொருளாதார சுமையை சற்று இறக்கி வைக்கும் வகையில், கேன்சர்களின் மருந்துகள் விலையை மத்திய அரசு குறைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் விளாசல்
புற்றுநோய் மருந்து விலையை கட்டுப்படுத்துதல் தொடர்பான மனு விசாரணையின் போது, பகல் கொள்ளை படுகொ*க்கு சமம் என உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியிருந்த நிலையில், புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில், 30 சதவீதத்துக்கும் மேல் லாபம் பெறக் கூடாது என வரம்பு நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனையடுத்து, 543 புற்றுநோய் மருந்துகளின் சில்லறை விலையை 90 சதவீதம் வரை குறைத்து தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
பல ஆயிரங்கள் குறைப்பு
பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய்க்கான palbociclib மருந்து 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 720 ரூபாயாகவும், Anarzole மருந்து 695 ரூபாயிலிருந்து 73 ரூபாயாகவும் குறைக்கப்படுகிறது.
கேன்சரின் முக்கிய சிகிச்சையான கீமோதெரபிக்கான thiotepa மருந்தின் விலை 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 7 ஆயிரத்து 150 ரூபாயாக குறைக்கப்படுகிறது.
கேன்சர் நோயின் போது எலும்பு பாதிப்பை தடுக்கும் மருந்தாக உள்ள டெப்ரூமாப் ஊசி 22 ஆயிரத்து 31 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 5 ஆயிரத்து 930 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9ஆம் தேதி முதல்
ரத்த புற்றுநோய்க்கான மருந்து 'டசனாட் 20' 2 ஆயிரத்து 812 ரூபாயிலிருந்து ஆயிரத்து 85 ரூபாயாகவும், Bevacizab மருந்தின் விலை 21 ஆயிரத்து 767 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 930 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விலை குறைப்பு நவம்பர் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
முன்பெல்லாம் எங்கோ ஓரிரு இடங்களில் ஒன்று இரண்டு பேர் கேன்சரால் பாதிக்கப்படுவர். ஆனால், தற்போதைய வாழ்வியல் சூழலில் கேன்சரால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது.
இந்த கேன்சர் தரும் உபாதையை விட பொருளாதார பெரும் சுமையை தூக்கி சுமப்பதே நோயாளிகளை வாட்டி வதைக்கும் நிலையில் இந்த மருந்துகளின் விலைக் குறைவால் உரிய நேரத்தில் மருந்துகளை உட்கொண்டு தங்கள் ஆயுட்காலத்தை கெட்டியமாக பிடித்துக் கொள்ள பேருதவியாக இருக்கும் என பலரும் நம்புகின்றனர்.