பிளம் இன்சூரன்ஸ் நிறுவனம், இந்தியாவின் 16,131 மகப்பேறு பதிவுகள் மற்றும் 16,192 மருத்துவக் காப்பீட்டுக் கோரிக்கைகளை ஆய்வு செய்து, வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
இந்தியாவின் பொதுவான சராசரிப்படி, பெண்கள் 25 வயதில் தாய்மை அடையும் நிலையில், பணிபுரியும் பெண்கள் சராசரியாக 29 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். பணிபுரியும் தாய்மார்களில் 45.1% பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
கொல்கத்தா 61%, டெல்லி, மும்பை, பெங்களூரு 59% என்று, 30 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள் அதிகமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் நகரங்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளன. சென்னையில் 39%, கோவையில் 27%, மதுரையில் 20% பேர் மட்டுமே 30 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களாக உள்ளனர். இங்கு சராசரி வயது 28 ஆக உள்ளது.
குறையாத சிசேரியன்
உலக சுகாதார அமைப்பின் விதிப்படி சிசேரியன் விகிதம் 10–15% மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், பணிபுரியும் பெண்களிடையே 25 வயதுக்குட்பட்டவர்களில் கூட 63% பேருக்கும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76% பேருக்கும் சிசேரியன் நடைபெறுகிறது.
அதிக கட்டணம் வசூலிக்கும் கார்ப்பரேட் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளில் 70% முதல் 73% வரை சிசேரியன் நடைபெறும் நிலையில், மிஷன் மற்றும் அறக்கட்டளை மருத்துவமனைகளில் மட்டுமே இது 52 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் 92%, லக்னோவில் 90% பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடைபெறும் நிலையில், இந்தியாவிலேயே மிகக் குறைந்த சிசேரியன் விகிதம் கொண்ட முதல் நான்கு நகரங்களும் தமிழ்நாட்டிலேயே உள்ளன.
வேலூர் - 34% இங்கு 67% பிரசவங்கள் அறக்கட்டளை மருத்துவமனைகளில் நடப்பதே இதற்குக் காரணம்
சேலம் - 48%
கோயம்புத்தூர் - 53%
சென்னை - 56%
35 வயதுக்கு மேல் அதிகரிக்கும் மருத்துவச் சிக்கல்
தாமதமாகும் தாய்மையால் 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1,000 பிரசவங்களுக்கு 57 பேருக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கருப்பை வாய் பலவீனம் 25 வயதுக்குட்பட்டவர்களில் 1,000 பேருக்கு 6.9 ஆக இருந்து, 35+ வயதில் மூன்று மடங்காக அதிகரித்து 21 ஆக உயர்கிறது. கர்ப்பகால சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தமும் இருமடங்காக அதிகரிக்கிறது.
காப்பீட்டு உச்சவரம்பும் குடும்பங்களின் நிதிச் சுமையும்
நிறுவனக் காப்பீடுகளில் மகப்பேறுக்கு ரூ.50,000 மட்டுமே உச்சவரம்பாக இருப்பதால், பெருநகரக் குடும்பங்கள் கடுமையான நிதிச் சுமையைச் சந்திக்கின்றன.
பிற நோய்களுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் பில் வந்தால் நோயாளி 17.5% மட்டுமே செலுத்தும் நிலையில், மகப்பேறு பில் ரூ.2 லட்சத்தைத் தாண்டினால் 69% தொகையைக் குடும்பங்களே கையிலிருந்து செலுத்த வேண்டியுள்ளது.
பெருநகரங்களில் காப்பீடு வைத்திருக்கும் 100க்கு 28 குடும்பங்கள் ரூ.75,000க்கும் மேல் சொந்தப் பணத்தைச் செலவழிக்கின்றன. சிறிய நகரங்களில் 8 குடும்பங்கள் மட்டுமே இவ்வளவு தொகையைச் செலவழிக்கின்றன.
கருச்சிதைவு காப்பீட்டை நிராகரிக்கும் நிறுவனங்கள்
சாதாரண பிரசவக் கோரிக்கைகளில் 6% மட்டுமே நிராகரிக்கப்படும் நிலையில், கர்ப்ப இழப்பு தொடர்பான கோரிக்கைகள் மூன்று மடங்கு அதிகமாக நிராகரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, மருத்துவக் காரணங்களுக்காகச் செய்யப்படும் கருக்கலைப்பு கோரிக்கைகளில் 41.7 சதவீதமும், கருச்சிதைவு கோரிக்கைகளில் 31 சதவீதமும் காப்பீட்டு நிறுவனங்களால் நிராகரிக்கப்படுவது தாய்மார்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
மருத்துவப் பணவீக்கத்திற்கு ஏற்ப நிறுவனங்கள் மகப்பேறு காப்பீட்டு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முக்கியப் பரிந்துரையாக உள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.