கொரிய நிறுவனங்கள் திசைமாறியது எப்படி?
வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வரும் தமிழ்நாட்டிற்கு, கடந்த சில மாதங்களாக முதலீடுகள் பற்றி வெளிவரும் தகவல்கள் கசப்பு மருந்தாக மாறியிருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் கடும் போட்டி நிலவி வருவது என்னவோ உண்மை தான்.
ஆனால், அண்மைக் காலமாக முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திராவே முந்துவதாக வரும் செய்திகள் தான் தவெக அரசை கலகலக்க செய்திருக்கிறது.
மூன்று கொரிய நிறுவனங்கள்
இந்த வரிசையில் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 3 கொரிய நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை ஆந்திராவுக்கு மாற்றியிருப்பது ஆளும் தரப்பை அதிர வைத்திருக்கிறது.
ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை சப்ளை செய்யும், ஹ்வாஷின் சியோயான் மற்றும் இவாமெட் ஆகிய தென்கொரிய நிறுவனங்கள், தங்களது ஆலை விரிவாக்க திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு பதிலாக ஆந்திராவை தேர்வு செய்திருக்கின்றன.
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் மொத்தம் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக, அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தென்னிந்தியாவின் முக்கியமான...
ஹ்வாஷின் 850 கோடி ரூபாயும், சியோயான் நிறுவனம் 514 கோடி ரூபாயும் இவாமெட் 250 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன் மூலம் மொத்தம் 1,418 நேரடி வேலைவாய்ப்பு உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆந்திராவின் அனந்தபூர் தென்னிந்தியாவின் முக்கியமான ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக உருவெடுக்க உள்ளது.
முன்னதாக, இந்த 3 நிறுவனங்களும் தங்கள் ஆலை விரிவாக்கத்துக்கு தமிழ்நாட்டை தான் தேர்வு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு...
ஏனெனில் ஸ்ரீபெரும்புதூரில் ஹ்வாஷின் நிறுவனமும், கிருஷ்ணகிரியில் சியோயான் நிறுவனமும் ஏற்கனவே செயல்பட்டு வருவதோடு, இவாமெட் நிறுவனமும் தமிழ்நாட்டில் தனது உற்பத்தியை தொடங்க பதிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்ட அந்நிறுவனங்களிடம் முந்தைய திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஃபாலோ-அப் செய்வதில் தமிழக தொழில்துறை கோட்டை விட்டதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை
கடந்த ஜூலை மாதம் தென்கொரியா சென்ற ஆந்திர மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தங்கள் மாநிலத்துக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
அழைப்பு விடுத்ததோடு நின்றுவிடாமல் ஆந்திர பொருளாதார மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதே, தற்போது முதலீடாக மாற காரணமாக அமைந்திருக்கிறது.
பெரும் பின்னடைவு
ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கனரகப் பொறியியல், மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் தென்கொரியா, தமிழ்நாட்டின் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்ததால், சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் தான், தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் கொரிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே, 'கொரியா டெஸ்க்' என்ற பிரிவை தொடங்கியது, தமிழகத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance நிறுவனம்.
இப்படிப்பட்ட சூழலில் ஆந்திரா இந்த முதலீடுகளை தட்டி சென்றிருப்பது, தமிழ்நாட்டிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.