காசிமேடு மீனவர்கள்  நியூஸ்தமிழ்24x7
இந்தியா

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள், கண்ணீரில் காசிமேடு மீனவர்கள்

சென்னை, காசிமேட்டில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் புயலில் சிக்கி மாயமான நிலையில், ஆந்திர மாநிலம் கொத்தபுரம் கடற்கரையில் மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. விசைப்படகு உரிமையாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Azhagiri Arumugam

காசிமேடு மீனவர்கள்

கடந்த மாதம் 29ஆம் தேதி, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

வங்க கடலில் உருவான ’முரசு’ புயல் காரணமாக, காசிமேடு மீனவர்களின் விசைப்படகு கடலில் சிக்கிய நிலையில், அதிலிருந்து மீனவர்கள் உதவி கோரி வயர்லெஸ் மூலம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், அவர்களை மீட்க மீன்வளத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே, மீனவ குடும்பத்தினரின் சரமாரி குற்றச்சாட்டு.

சாலை மறியல்

ஆந்திர மாநிலத்தில்...

கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவி கோரி 4 நாட்கள் கடந்த நிலையிலும், 9 பேரில் நிலை என்னவென்று தெரிய வராததால் ஆவேசமான அவர்களது குடும்பத்தினர், காசிமேடு காவல்நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மாயமான காசிமேடு மீனவர்களின் உடல்கள், ஆந்திராவில் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை கேள்விபட்டதும், அவர்களது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

கதறி அழுத மீனவர்கள்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தபுரம் கடற்கரையில் காசிமேடு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் கடலில் குப்புற கவிழ்ந்த நிலையில் விசைப்படகும் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் மரிய வில்சனை சந்தித்த குடும்பத்தினர், அவரது காலில் விழுந்து கதறி அழுதனர்.

குற்றச்சாட்டு

மெத்தனப்போக்கால்...

’பாதுகாப்பு உபகரணங்கள், உரிய ஆவணங்கள் மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாமல், புயல் எச்சரிக்கையையும் மீறி கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பியதே உயிரிழப்புக்கு காரணம்,’ என்று விசைப்படகு உரிமையாளர் செல்வழகன் மீது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே துரிதமாக செயல்பட்டிருந்தால் மீனவர்களை காப்பாற்றி இருக்கலாம் என்றும், அவர்களது மெத்தனப்போக்கால் தான் 9 பேரின் உயிர்கள் பறிபோனதாகவும் வேதனை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மரியவில்சன், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அமைச்சர் மரியவில்சன்

மேலும், 9 பேரின் உடல்களை மீட்டு காசிமேட்டிற்கு கொண்டு வருவதற்காக அவர்களது குடும்பத்தினருடன் ஆந்திரா செல்வதாகவும் தெரிவித்தார் அமைச்சர் மரியவில்சன்.

மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்; இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.