பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சிறு தொழில்முனைவோருக்கு எளிதாக கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக "ஸ்டாண்ட்-அப் இந்தியா" நிதிக்காக 4 ஆயிரத்து 111 கோடி ரூபாயும், "பிரதான் மந்திரி முத்ரா யோஜனா" நிதிக்காக 5 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
உரங்களுக்கான மானிய பட்ஜெட்டை 50 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. நடப்பு ரபி பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் 50 கிலோ எடை கொண்ட டிஏபி உர மூட்டை ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
டெல்லியில் நடைபெற்று வரும் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய விமானப்படையின் போர் தயார் நிலை மற்றும் தற்போதைய பாதுகாப்புச் சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விமானப்படையின் நவீனமயமாக்கல் குறித்தும் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கிய எம்பியும் ஜே.என்.யு.வின் முன்னாள் பேராசிரியருமான அங்கோம்சா பிமோலுக்கு (Angomcha Bimol) தேர்தல் பொறுப்பை வழங்கியதன் மூலம் காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை நிரூபித்துவிட்டதாக பாஜக சாடியுள்ளது.
பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பைப் பற்றிப் பேசும் ராகுல் காந்திக்கு, பெண்களுக்கு எதிரானவர்களை ஊக்குவிப்பது தான் வேலையா? என்றும் பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. மணிப்பூரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, அங்கோம்சா பிமோல் காங்கிரஸ் தேர்தல் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.