இந்தியா

கல்தூணில் தீபம் ஏற்ற மீண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்ச கல்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து எடுத்துச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் கூறி உள்ளது.

Azhagiri Arumugam

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, இன்று நவம்பர் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது;

இந்த சூழ்நிலையை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் இது அரசியல் சாசனக் குழப்பத்துக்கு வழிவகுக்கும்.

இப்போது, மனதில் முதலில் தோன்றும் வார்த்தை, ‘அந்தோ பரிதாபம்’ (ALAS).

தற்போதைய சூழ்நிலையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இதற்கான காரணங்களைத் தொடர்ந்து தெரிவிக்கிறோம். இதனை மிகுந்த வேதனை, மனக்குமுறலுடன் கூறுகிறோம்.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியே உயர்வானது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய உறுதி பூண்டிருப்பதை அரசியல் சாசனத்தின் முகவுரை பிரதிபலிக்கிறது.

உச்சநீதிமன்றத்திற்கு உதவியாக..

இந்திய அரசியல் சாசனத்தின் 144வது பிரிவின்படி, இந்திய எல்லைக்குட்பட்ட அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகார அமைப்புகளும் உச்சநீதிமன்றத்துக்கு உதவியாகச் செயல்பட வேண்டும்.

இந்த அரசியல் சாசனக் கடமையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தேவையற்ற அனுதாபம் காட்டாமல் உறுதியாகக் கையாள வேண்டும். நீதி எனும் நீரோடையை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது என்பதுதான் நாங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி.

வலிமையான ஆயுதம், நீதிமன்ற அவமதிப்பு சட்டம்

உச்சநீதிமன்றமே தனது உத்தரவை மாற்றியமைக்காத வரை, அந்த உத்தரவு என்பது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, நாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது. அரசியல் சாசனத்தின் 144வது பிரிவு நீதியை நிலைநாட்டுவதற்கு வழிவகுக்கிறது.

நீதித்துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உதவுகிறது. நீதி பரிபாலனத்தை உறுதி செய்வதற்கு அரசியல் சாசன நீதிமன்றங்களிடம் உள்ள வலிமையான ஆயுதமாக நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உள்ளது.

துணிச்சலுடன் மீறப்பட்ட உத்தரவு

நவம்பர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அளிக்கப்பட்ட உறுதிமொழியையும் மீறி, மாநில அரசும் அதன் அதிகாரிகளும் தேவஸ்தானத்துடன் கூட்டுச் சேர்ந்து உச்சிப்பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றியுள்ளனர்.

இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் துணிச்சலாக மீறியிருப்பதை முதற்கட்டமாக வெளிப்படுத்துகிறது.

’உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம்’ என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டை அறங்காவலர்கள் எடுத்துள்ளனர். இது அவர்களது தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான விதிமீறல். இதற்கு இதர அதிகாரிகளும் துணை புரிந்துள்ளனர்.

அறங்காவலர் குழுவின் தீர்மானமானது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே அப்பட்டமாக மீறியிருப்பதையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழியைத் துணிச்சலாகப் புறக்கணித்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

நீதிமன்ற அவமதிப்பு, முகாந்திரம் உள்ளது

மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான முகாந்திரம் உள்ளது. நிர்வாக அதிகாரிகள் அரசியல் தலைமையின் கட்டளைகளின்படி செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது

தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு

இதுதொடர்பான தகவல் பரிமாற்றங்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் ஆகியவற்றை தமிழக தலைமைச் செயலாளர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தாம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்து சம்பிரதாய மன்னிப்பையும் கோரியுள்ளார். ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை திருப்தியளிக்கவில்லை.

இந்த அறிக்கையை முதற்கட்டமாகப் பார்க்கும்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே உள்ளது. நவம்பர் 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது என்பதற்கான முதற்கட்ட முகாந்திரம் இருப்பதில் நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம்.

கோயில் அறங்காவலர் குழு சஸ்பெண்ட்

கோயிலின் பாதுகாப்பு, அறநிலையத்துறை ஆணையரின் பொறுப்புக்கு உட்பட்டது. அதிகாரிகள் தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறியபோது இந்த நீதிமன்றம் தலையிட்டுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. அறங்காவலர் குழுவை உடனடியாக சஸ்பெண்ட் செய்கிறோம்.

அறங்காவலர் குழுவிடமிருந்து உடனடியாகக் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நிர்வகிக்க, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் நிர்வாகிகளாக முன்னாள் நீதிபதிகளை நியமிக்கிறோம்.

சிஆர்பிஎப் வசம் கோயில் பாதுகாப்பு

உள்ளூர் காவல்துறையினர் தங்களது கடமையை நிறைவேற்றத் தவறியதால், கோயிலின் பாதுகாப்புப் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டன்ட்டுக்கு உத்தரவிடுகிறோம். பாதுகாப்புப் பொறுப்பைச் சுமுகமாக ஒப்படைப்பதை டிஜிபி, ஐஜி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும்.

நாளை தீபம் ஏற்ற உத்தரவு

உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும் தீபத்தின் சுடரிலிருந்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை நவம்பர் 28ஆம் தேதி தீபம் ஏற்றுமாறு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கோயில் நிர்வாகிகளுக்கு உத்தரவிடுகிறோம்.

தர்காவிலிருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீபத்தூணில் அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்ற அனுமதிக்கிறோம்.

தர்காவைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மேற்கொள்ள வேண்டும்.

டிசம்பர் 15ஆம் தேதி

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சர்வே கல் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குகிறோம். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வீடியோவில் காணலாம்