"எல்லை தாண்டி வந்தால் விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும்," என இலங்கை மீனவர்கள் பகிரங்கமாக விடுத்துள்ள மிரட்டல் ஆடியோவால், தமிழகக் கடலோர மாவட்டங்களில் பெரும் பதற்றமும் பீதியும் நிலவுகிறது. இலங்கை மீனவர்கள் ஆவேசமாக மிரட்டல் விடுக்கும் அளவுக்கு காரைக்கால் மீனவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்?
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்
தமிழகத்தின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் அவ்வப்போது சர்வதேச கடல் எல்லையை தாண்டி, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைவைப்பதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பின்னர், தமிழக அரசின் தலையீட்டின் பேரில், இந்திய தூதரகம் மூலம் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதும் ஓயாத அலைகளாக இருந்து வருகிறது.
மிரட்டும் மீனவர்கள்
தற்போது, ஒருபடி மேலே, இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் அளவுக்கு விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இலங்கை மீனவர்களை சண்டைக்கு இழுக்கும் அளவுக்கு ஊதி பெரிதாக்கி இருப்பது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி விசைப்படகு மீனவர்களின் அடாவடிச் செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காரைக்கால் பகுதி மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டிச் சென்று, கடலில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் விரித்து வைத்துள்ள வலைகளை அறுத்தெறிந்து சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமன்றி, தமிழகத்தின் ராமேஸ்வரம் - தங்கச்சிமடம் பகுதி மீனவர்களின் வலைகளையும் இந்த காரைக்கால் மீனவர்கள் நடுக்கடலில் சேதப்படுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொந்தளிக்கும் மீனவர்கள்
இதனால்,வாழ்வாதாரத்தை இழந்து கொந்தளித்துள்ள இலங்கை மீனவர்கள், ’தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பரப்புக்குள் வந்தால், விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும்,’ என பகிரங்கமாக கொ* மிரட்டல் விடுத்து எச்சரித்துள்ள ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகி தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோ காட்டுத்தீ போலப் பரவி வருவதால், தமிழக மீனவக் கிராமங்களில் ஒருவித அச்சத்துடனான பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
அவசர எச்சரிக்கை
இதனிடையே, சூழ்நிலையின் தீவிரத்தைக் கருதி, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால், எக்காரணம் கொண்டும் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிரந்தர தீர்வு
ஒரு சில பகுதி மீனவர்களின் தவறான செயல்களால், எவ்விதப் பாதுகாப்புமின்றி கடலுக்குச் செல்லும் ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் துயரத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக இராமேஸ்வரம் செய்தியாளர் ஹரிபிரசாத்.