மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அவை என்னென்ன? என்பதை பார்க்கலாம்.
மதுராந்தகம் தொகுதிக்கு...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அத்திமனம் கிராமத்தில் 5 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்படும் என்றும், தொகுதிக்கு உட்பட்ட 6 இடங்களில் தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அச்சரப்பாக்கத்தில் 20 கோடி ரூபாயில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுவதோடு, படாளம் - உதயம்பாக்கம் இடையே ஒரு புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
மகளிர் தங்கும் விடுதி
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்படுவதோடு, மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்படவுள்ளது.
மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கு புதிய தங்கும் விடுதி 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுவதோடு, புக்கத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை மின் நிலையத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் 25 MVA திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்படுவதோடு, வீடற்றவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும் என்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதியில்...
தாராபுரம் தொகுதியில் ஆயிரத்து 232 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ஆயிரத்து 439 கோடியில் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என்றும், தாராபுரம் தொகுதியில் வீடு இல்லாமல் உள்ள 2 ஆயிரத்து 700 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 கோடி ரூபாய் மதிப்பில் பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுக்களை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டங்களில் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.
மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படுவதோடு, தாராபுரம் நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.