டெல்லியில் அமைதியான முறையில் போராட முயன்ற இளைஞர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டுள்ளதாக, மத்திய பாஜக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் நீட்சியாக செயல்பட்டு, போராடும் மாணவர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக தவெக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
எமர்ஜென்சி காலத்தை போல...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
இன்று டெல்லியில் அரங்கேறும் காட்சிகளும், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறையின் தீவிரமும், நான் நேரில் கண்ட அவசரநிலைக் காலத்தின் Emergency கசப்பான நினைவுகளை மீண்டும் கண்முன் நிறுத்துகின்றன. டெல்லி மற்றும் நாடு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
தவெக அரசுக்கும் கண்டனம்
பாஜகவின் ஒரு நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் தமிழக அரசின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக ரீதியிலான போராட்ட உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
மாற்றுக்கருத்து தெரிவிப்பது குற்றமல்ல, ஜனநாயகத்தைக் காக்க முன்வருபவர்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.
சுதந்திரமும் நேர்மையும்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா என்பது கட்டாயம் நிகழ வேண்டிய ஒன்றாகும். அவரது ராஜினாமாவுக்கு அப்பால், தேர்தல் ஆணையத்தின் நிறுவனக் கட்டமைப்பிற்கு இழைக்கப்பட்ட அனைத்து சேதங்களும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.