நேரலையில் நிகழ்ந்த சோகம் 
news

மரணத்தைப் பற்றி பேசிய போதகருக்கு, நேரலையில் நிகழ்ந்த சோகம்

மரணத்தின் யதார்த்தத்தை பற்றி மேடையில் பிரசங்கம் செய்த பாதிரியார், அதே மேடையில சிலுவை சரிந்து விழுந்து மரணித்தார்.

Azhagiri Arumugam

மரணத்தின் யதார்த்தத்தை பற்றி மேடையில் பிரசங்கம் செய்த பாதிரியார், அதே மேடையில சிலுவை சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஈக்வடார் நாட்டில் நடந்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையையும், ஆன்மிக உலகையும் அதிர வைத்துள்ளது.

நேரலை ஒளிபரப்பில்...
ஈக்வடார் நாட்டின் குவாக்வில் பகுதியில் உள்ள 'Our Lady of Perpetual Help' தேவாலயத்தில் பாதிரியார் பாட்ரிசியோ அல்ப்ரெடோ சான்செஸ் மொலினாரி என்பவர் பங்குத் தந்தையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமையன்று வழக்கம் போல் அவர், தேவாலயத்தில் திருப்பலி பூஜையை நடத்த அது இணையத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பாகிக் கொண்டிருந்தது.

பொன்னான நேரத்தை...
அப்போது, தனக்கு முன்னால் இருந்தவர்களைப் பார்த்து, ’நம் வாழ்க்கை மிகவும் குறுகியதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதால், அதை வீணடிக்க வேண்டாம்,’ என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் தங்களது பொன்னான நேரத்தை செல்போன்களில் தேவையின்றி ஸ்க்ரோல் செய்து கழிப்பதைத் தவிர்த்துவிட்டு, கடவுளுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஒரு நாள் இறப்போம்...
ஒரு நாள் நாம் அனைவரும் இறக்கத் தான் போகிறோம். அப்போது நாம் எதற்காக நேரத்தைச் செலவிட்டோம் என்பதுதான் முக்கியமானது என்று அவர் ஆழமான ஆன்மிகத்துக்குள் போய் பிரசங்கம் செய்தார்.

பிரசங்கத்தை முடித்துவிட்டு, கூடியிருந்த மக்களுக்காக இறைவனிடம் ஆசீர்வாதம் வேண்டி மற்றொரு ஜெபத்தைத் தொடங்கியுள்ளார் பாதிரியார் மொலினாரி. அப்போதுதான் அந்த எதிர்பாராத சோகம் நடந்துள்ளது.

பின்னால் இருந்த சிலுவை...
அவர் நின்றுகொண்டிருந்த பீடத்திற்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை, திடீரென்று முன்னால் சரிந்து விழுந்தது. எதைப் பற்றியும் அறியாமல் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த பாதிரியாரின் தலையின் பின்பகுதியில் அந்தப் சிலுவை பலமாக மோதியது.

இந்த அதிர்ச்சிகரமான விபத்து அங்கிருந்த நேரலை கேமராவிலும் பதிவானது.

உயிரிழந்த போதகர்
சிலுவை விழுந்த வேகத்தில் பாதிரியார் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அதன்பிறகு அவர் எழவே இல்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவாலயத்திலிருந்த வழிபாட்டாளர்கள் அலறித் துடிக்க, ஓடிச்சென்று பாதிரியாரை மீட்டு அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.

துரிதமாக வந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தும், பாதிரியார் மொலினாரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பேசுபொருளான சம்பவம்
மரணத்தைப் பற்றியும், வாழ்வின் தற்காலிகத் தன்மையைப் பற்றியும் பேசிய சில விநாடிகளிலேயே பாதிரியார் மொலினாரி அதே தேவாலயத்தில் மரணத்தைத் தழுவியிருப்பது அங்குள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தேவாலய அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.