புழல் மத்திய சிறையில்...
உயரிய பாதுகாப்பு வளையத்தைக் கொண்ட சென்னை புழல் மத்திய சிறை மற்றும் தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறை பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறை காவலர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், புழல் சிறையில் இருந்து கைதி தப்பியோடியது எப்படி? என்ற தகவல் கிடைத்துள்ளது.
தப்பியோட திட்டம்
புழல் சிறையில் கைதிகள் வெளியில் தப்பிச் செல்லாமல் இருக்க, மின்வேலி பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதனை மீறியும் கைதி தப்பிச் சென்றது பல கேள்விகளை எழுப்பியது. புழல் சிறையில் தப்பிய நேபாள கைதி சுதிப் போகத், பல நாட்களாக சிறை நடைமுறைகளை நோட்டமிட்டு தப்பியோட திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, தப்பிச் சென்ற கைதி 2 மணி நேரத்திற்கு மேலாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைந்து நின்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிப்படை போலீசாரிடம்...
குறிப்பாக, சிறை வளாகத்தில் எப்போதுமே ரேடியோவும், டிவியும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பவத்தன்று மின்சாரம் பழுது ஏற்பட்டிருக்கிறது. மின்சார பழுது ஏற்பட்டதை ஊழியர்கள் சரி செய்து கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த நேபாள கைதி தப்பியோடியிருக்கிறான்.
40 அடி உயர சுவர் ஏறி குதித்து தப்பிய கைதி, பாதி தூரத்தில் மயங்கி விழுந்து இருக்கிறான். சிறை பஜார் வேலைவாய்ப்பைப் பயன்படுத்தி, கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களோடு கலந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்குத் தப்ப முயன்ற போது தனிப்படை போலீசாரிடம் சிக்கியுள்ளான்.
சம்பவத்தன்று...
பொதுவாக, சிறை சுற்றுச்சுவர்களில் 5000 முதல் 8000 வோல்ட் கொண்ட DC Pulse Current மின்வேலி அமைக்கப்பட்டிருக்கும். இதைத் தொட்டவுடனேயே கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் சென்றுவிடும். ஆனால், சம்பவத்தன்று பேட்டரி பேக்கப் வேலை செய்ததா? இன்சுலேட்டர் பழுது காரணமாக கரண்ட் லீக் ஆனதா? அல்லது சுற்றுச்சுவரில் அவ்வப்போது மட்டும்தான் மின்சாரம் கொடுக்கப்படுகிறதா? எனப் பல கோணங்களில் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்த போது இன்னும் பல அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
அதாவது, காம்பவுண்டு சுவர்களில் எப்போதாவது தான் மின் இணைப்பு கொடுக்கப்படுமாம். ஆகையால், இனிமேல் கைதிகள் தப்பி ஓடாமல் இருக்கவும், பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யவும் 24 மணி நேரமும் DC மின்சாரத்திற்கு பதிலாக AC மின்சாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது சிறைத்துறை.
தீவிர ரோந்து பணியில்...
மேலும், ஒவ்வொரு கைதியையும் தினசரி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆய்வு செய்த பின்னரே சிறைகளில் அடைக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதிகள் அனைவரும் சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை அவர்களைச் சரியாகச் சரிபார்க்கும் DOUBLE VERIFICATION நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிறை வளாகத்திற்குள் பாதுகாப்பு பலவீனமாக உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.