news

விஜய் VS தனுஷ் ஒப்பீடு சரியா? என்ன ஆகும் அதிமுக, திமுக எதிர்காலம்?

திடீர் சாமியார் போல, நடிகர் தனுஷின் அரசியல் நகர்வுகளும் வேகமெடுத்து வரும் நிலையில், தனுஷின் பிரவேசம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலசி ஆராய வேண்டியுள்ளது.

Azhagiri Arumugam

இன்னொரு விஜய்யாக சாதனை படைக்கும் அளவுக்கு தனுஷுக்கு சாதகமான சூழல் இருக்கிறதா? என்பது ஒரு பக்கம் இருக்க, தனுஷின் வருகையை திமுக, அதிமுக கட்சிகள் எப்படி அணுகுகின்றன என்பதும் விவாதமாகியுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் தனுஷ் அடங்காத அசுரனா? அல்லது ஆண்டவர் கமல்ஹாசனின் நகலா? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நடிகர் தனுஷ்

அசுரனின் பாய்ச்சல் பலன் கொடுக்குமா?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்பது யூகமாக இருந்தது போய், தற்போது உறுதியே ஆகிவிட்டது. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியது, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திப்பது, மகளிர் அணி நிர்வாகிகளை சந்திப்பது என குறுகிய காலத்திலேயே ராக்கெட் வேகத்தில் தனுஷின் செயல்பாடுகள் இருக்கின்றன. அரசியலில் இறங்க தனுஷ் காட்டும் ஆர்வம் புருவம் உயர்த்த வைத்தாலும், தனுஷின் அரசியல் வருகை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.

விஜய் vs தனுஷ்

தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவல் பரவியதிலிருந்தே, சமூக வலைதளங்களில் 2031 தேர்தலில் விஜய் வெர்சஸ் தனுஷ் என அவரது ஆதரவாளர்கள் ஆரூடம் கணித்து வருகிறார்கள். விஜய்யை பார்த்து அரசியலுக்கு வரும் தனுஷால், விஜய் அளவுக்கு வெற்றியை பெற முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. திரைத்துறையில் இருந்து வருகிறார் என்பதாலேயே விஜய் வெர்சஸ் தனுஷ் என ஒப்பீடு செய்வதும் நியாயமா? என்ற கேள்வியும் எழுகிறது.

விஜய் vs தனுஷ்

விஜய் வந்த நேரம்...

ஏனென்றால், 2009ஆம் ஆண்டிலேயே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், அப்போதில் இருந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதோடு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து வயதினர் மத்தியிலும் ஆதரவு இருந்தது. குறிப்பாக பெண்களின் ஆதரவு அசைக்க முடியாத ஆலமரம் போல வேரூன்றி இருந்தது. அதே சமயம், முதலமைச்சர் விஜய் அரசியலில் இறங்க தேர்வு செய்த காலம், நேரமும் கவனிக்கப்பட வேண்டியது.

ஆட்சி, அதிகாரத்தில் விஜய்

கலைஞர் கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக என வலுவான தலைமை இல்லாமல் இருந்தது. முதலமைச்சர் விஜய்யின் கரிஷ்மாவுக்கு ஈடுகொடுக்க சம காலத்தில் தலைவர்கள் யாரும் இல்லாததால், அது வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. அதே சமயம், அரசியலில் மாற்றம் வேண்டும் என எண்ணியவர்களின் தேர்வும் விஜய்யாக தான் இருந்தது. இதுவே ஆட்சியை பிடிக்கவும் வழிவகுத்தது.

விஜய்

விஜய் உடன் போட்டியா?

நடிகர் தனுஷ் தற்போது தான் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி நிர்வாகிகளை சந்திக்கவே தொடங்கி இருக்கிறார். தனுஷுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆதரவு கிடையாது என்பதும் அனைவரும் அறிந்ததே. அதேபோல, ஆட்சியை பிடித்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு, மக்கள் மத்தியிலான ஆதரவு இம்மியளவும் குறையவில்லை.

சொல்லப்போனால், அதிகார பலம், மக்கள் செல்வாக்கு என முதலமைச்சர் விஜய்யின் கிராஃப் ஏறிக் கொண்டே செல்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசியல் கட்சி தொடங்க எத்தனிக்கும் தனுஷால், முதலமைச்சர் விஜய்யுடன் போட்டி போட்டு சோபிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தயவில்...

தனுஷின் அரசியல் எண்ட்ரீயில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அதிமுக, திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தான். விஜய் வெர்சஸ் தனுஷ் என தனுஷின் ரசிகர்கள் பேசி வரும் நிலையில், இரு திராவிடக் கட்சிகளும் தனுஷை எப்படி அணுகும் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. தனுஷின் தற்போதைய செயல்பாடுகளை பார்க்கும் போது, பாஜக லேபிளுடன் தான் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்பதும் தெரிகிறது.

வெள்ளி விளக்கு

அரசியல் பிரவேஷம் பலிக்குமா?

ஏனென்றால், மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பரிசாக கொடுத்த வெள்ளி காமாட்சி விளக்கிலேயே தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததும், டெல்லிக்கு விசிட் அடித்ததும் பாஜக உடனான தனுஷின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே இருந்தது. அதிமுக, திமுக கட்சிகளை வலுவிலக்கச் செய்ய வேண்டும் என்ற டார்கெட்டில் இருக்கும் பாஜக, தனுஷை வைத்து அந்த திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறதா? என்ற வினா எழுந்துள்ளது. ஆனால், அதிமுக, திமுகவை காலி செய்யும் அளவுக்கு தனுஷின் அரசியல் பிரவேசம் பலிக்குமா? என்பதும் சந்தேகம் தான்.

’எம்ஜிஆர் ஆகி விட முடியாது’

75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட திமுக, 50 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட அதிமுகவின் ஆதரவு வட்டம் வேண்டும்

என்றால் சுருங்கியிருக்கலாம். ஆனால், அந்த கட்சிகளுக்கான அடித்தளம் வலுவாகவே இருக்கிறது. தனுஷ் குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், எல்லாரும் எம்.ஜி.ஆர்., விஜய் ஆகிவிட முடியாது என்றார்.

திமுக

அதிமுகவில் தனுஷ்?

தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் மீதான பார்வையும் இப்படி தான் இருந்தது. ஆனால், தேர்தலில் நடந்தது என்னவோ வேறு. அரசியலில் நுழைய தனுஷ் தேர்ந்தெடுத்திருக்கும் நேரம், அவருக்கு சவாலை கொடுக்கும் என்றே கருதப்படுகிறது. முதலில் அதிமுகவில் சேர விரும்பிய தனுஷ், அதிகாரமிக்க பதவியை கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்றுக் கொள்ளாத நிலையில், அதிமுக மாதிரியான கட்சிகளில் இணைந்து அரசியல் முகமாக மாற்றிக் கொண்டதால், அரசியலில் ஓரளவுக்காவது நிலைக்க முடியுமே தவிர, தனியாக கட்சி தொடங்கி தாக்குப்பிடிக்க முடியுமா? என்பதெல்லாம் போக போக தெரியும்.

தனுஷ் தமிழ்நாட்டு அரசியலில் அசுரனாக விஸ்வரூபம் எடுப்பாரா? அல்லது கமல்ஹாசன் போல காலவோட்டத்தில் கரையும் நகலாக மாறுவாரா? என்பதற்கான விடை அவரது அடுத்தடுத்த நகர்வுகளில் ஒளிந்துள்ளது.

தனுஷ் அரசியல்