இந்த நிதியாண்டில், இந்திய ஐடி துறை கடுமையான சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக, இதுவரை பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இது முடிவல்ல. இந்த பணி நீக்கம் இனியும் தொடரும் என்றும், இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திப்பார்கள் என்றும் தரவுகள் வெளியாகியுள்ளன. IT ஊழியர்களின் பணி நீக்கத்துக்கான காரணிகள் குறித்து, விரிவாக பார்க்கலாம்...
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான Tata Consultancy Service அதாவது TCS நிறுவனம், அடுத்த நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பரவி வரும் தகவல், பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய கால கட்டத்தில், நம் உலகம் AI மயமாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான (AI) தேவை அதிகரித்துள்ளதால், அதற்கான மறுசீரமைப்பு திட்டங்களில் TCS நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
அண்மையில் கூகுள் நிறுவனம் அதன் AI அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதேபோல் HCL நிறுவனமும் அதன் 8000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
AI வருகை காரணமாக ஐடி துறை சரிவைக் கண்டுள்ளது ஒரு காரணமாக இருந்தாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் இதன் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதனால் TCS மற்றும் Infosys போன்ற ஐடி நிறுவனங்கள் பெரிதாக பாதிக்கக்கூடும் என மூடிஸ் (Moodys) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் ஏற்படும் மாற்றங்களால் இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும்.
அது எப்படியென்றால், டிரம்ப் சமீபத்தில் ஹெச்-1பி (H 1B) விசா கட்டணத்தை திடீரென பல மடங்கு அதிகரித்து ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார். இதை சமாளிக்க முடியாத பல திறமை வாய்ந்த இந்திய ஊழியர்கள் தங்களது தாயகத்துக்கே திரும்பி வருகின்றனர். இதனால் இந்தியர்களை நம்பியிருந்த IT நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விசா கட்டண உயர்வு காரணமாக ஆன்சைட் செல்ல முடியாத இந்தியர்களை மாஸ் Lay Off செய்துவிட்டு அவர்களுக்கு பதிலாக அமெரிக்கர்களையே அந்நிறுவனங்கள் பணியமர்த்த வாய்ப்புள்ளது எனவும் மூடிஸ் நிறுவனம் ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் பதற்றமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.