ஒரு காலத்தில் திருப்பத்தூர் நகரின் அடையாளமாக திகழ்ந்த பெரிய ஏரி தற்போது "கரணம் தப்பினால் மரணம்" என்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் மெத்தனத்தால் கூவமாக உருவெடுத்து நிற்கும் பெரிய ஏரியை சுத்தப்படுத்துவதோடு, ஏரியின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
திருப்பத்தூரில் 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில் 41.13 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும் என்பதால் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கோடைகாலத்திலும் வற்றாத நீருற்று என கூறப்படும் இந்த ஏரியில் தற்போது டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அவ்வழியாக வாகனஓட்டிகள்கூட செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் குடலை புரட்டுவதாக புகார் எழுந்துள்ளது..
ஏரியின் ஒரு பக்கம் தண்ணீரும் மற்றொரு பக்கம் 25 அடி பள்ளமும் உள்ளதால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் ஒருவித பதற்றத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்..