வெங்காயம் கொள்முதல் நியூஸ்தமிழ்24x7
news

400 மெட்ரிக் டன் வெங்காயம் ஆர்டர் கேன்சல், ஆய்வையும் தாண்டி மூட்டை வந்தது எப்படி?

மூன்று முறை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்து வந்த அரசு, தற்போது 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணையை ரத்து செய்துள்ளது. அழுகல், முளைப்பு, பூஞ்சை பாதிப்பு உள்ளிட்ட குறைபாடு தான் கொள்முதல் ஆணையையே ரத்துவரை கொண்டு சென்றுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் இதனை எப்படி கண்டுபிடித்தார்கள்?

Azhagiri Arumugam

நியாயமான வெங்காயம்...

’மண்ணுக்குள்ள இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்க தோலாண்டி’ ஆன வெங்காயத்தை வெட்டினால் தான் பொதுவாக கண்ணீர் கொட்டும். ஆனால், வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறினாலே சாமானிய மக்களுக்கு தானாகவே கண்ணீர் கொட்டும். அரிசி எப்படி அத்யாவசியமோ அதுபோன்றுதான் வெங்காயம் இல்லாத சமையலே இல்லை. அதனால்தான் அதன் விலையும் ஏழைகளை நேரடியாக தாக்கி அவ்வப்போது கூடுதல் சுமையாக மாறுகிறது.

இதனை கருத்தில்கொண்டு பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயத்தை வழங்க தமிழக அரசு சந்தைத் தலையீட்டு நடவடிக்கையை முன்னெடுத்தது.

வெங்காயம்

இதற்காக, NAFED என சொல்லப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் மற்றும் NCCF என அழைக்கப்படும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் உள்ளிட்ட தேசிய கூட்டுறவு அமைப்புகள் மூலம் வெங்காயத்தை கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் வழியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

வெங்காய விற்பனை அமோகம்

எப்படியோ, ”ஏழைகளின் வயிற்றில் பாலை வார்த்தால் போதும்” என பலரும் வரவேற்பு தெரிவிக்க கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள TUCS நியாயவிலைக் கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இதன்படியே, முதல் கட்டமாக NAFED நிறுவனத்திடம் இருந்து 910 மெட்ரிக் டன், NCCF நிறுவனத்திடம் இருந்து 65 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டன.

இதில், மொத்தம் 949.44 மெட்ரிக் டன் வெங்காயம் வர, 922.92 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டது. அதன் விற்பனை சதவீதம் 97 ஆக இருந்தது.

குறைந்த விலையில்

பொதுமக்களிடம் வரவேற்பு

இரண்டாம் கட்டமாக NAFED மூலம் 1,414.33 மெட்ரிக் டன் மற்றும் NCCF மூலம் 460 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 848.31 மெட்ரிக் டன் வெங்காயம் வந்துசேர, 811.26 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டது. அதன், விற்பனை சதவீதம் 96 ஆக இருந்தது.

தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக NCCF நிறுவனத்திடம் இருந்து சுமார் 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 700.19 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்று, 646.14 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டது. அதன், விற்பனை சதவீதம் 92 ஆக இருந்தது.

400 மெட்ரிக் டன் வெங்காயம்

இவ்வாறு, பொது மக்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே 4ஆவது முறையாக 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் NAFED நிறுவனத்திடம் இருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆணை வழங்கியதோடு, ஒரு கிலோ வெங்காயம் 29 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யவும் முடிவு செய்திருந்தது.

ஆய்வில் அதிர்ச்சி

ஆய்வில் அதிர்ச்சி

இதனிடையே, கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் 'A' தரத்தில் இருக்க வேண்டும் எனவும் குறைந்தபட்சம் 45 மில்லிமீட்டர் அளவு கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப வெங்காயம் இருந்ததா? என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் அதிர்ச்சி தகவலே வெளியில் வந்தது.

வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கு முன்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மகாராஷ்டிராவில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் 'A' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் தூக்கி எறியப்பட வேண்டியவைகளும் கலந்திருப்பது கண்ணில்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஏற்கெனவே சென்னைக்கு வந்த வெங்காய மூட்டைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவில் இறங்கினர். இதன்படியே, அக்டோபர் 31 அன்று கொருக்குப்பேட்டை முனையத்திற்கு வந்த வெங்காய மூட்டைகளை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் குழுவினர் கண்ணில் விளக்கெண்ணெய்விட்டு ஆய்வு செய்தனர். அப்போதுதான், வெங்காயத்தின் லட்சணமே எட்டி பார்த்தது.

கெட்டுப் போன வெங்காயம்

மாதிரி மூட்டைகளில் 20 முதல் 26 சதவீதம் வரை அழுகியும், முளைத்தும், பூஞ்சை படிந்து கருப்பு நிறத்திலும் கிடந்தது தெரியவந்தது. அதுமட்டுமா? ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 45 மில்லிமீட்டர் குறைந்தபட்ச அளவைக் காட்டிலும் 50.2 சதவீத வெங்காயம் சிறியதாகவே இருந்ததும் கண்டறியப்பட்டது. அதாவது, வெங்காயத்தின் தரத்தில் மட்டும் கை வைக்கப்படவில்லை. மாறாக, அளவிலும் கை வைக்கப்பட்டிருந்தது.

அதனால், யோசிக்காமல் 400 மெட்ரிக் டன் கொள்முதல் ஆணையையே ரத்து செய்தது அரசு.

அதேநேரம், கொருக்குப்பேட்டை முனையத்தில் இருந்த தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் கூட்டுறவுத்துறையின் வெங்காயம் அல்ல என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் தரமற்ற வெங்காயத்தை பொது மக்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கொள்முதல் நிலையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

அழுகிய வெங்காயம்

என்ன தான் பிரச்சினை?

இந்த விளக்கம் ஏற்புடையது தான் என்றாலும், மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே தரக்குறைபாடு கண்டறியப்பட்ட நிலையில், அதையும்தாண்டி வெங்காய மூட்டைகள் அடுத்தகட்டத்திற்குச் சென்றது எப்படி? இதற்குப் பின்னால் சேமிப்புக் குறைபாடா, போக்குவரத்துப் பிரச்சினையா அல்லது ஆரம்பத்திலேயே தரமற்ற வெங்காயம் அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.

உத்தரவு ரத்து

இதேபோல், வெங்காயத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து NAFED நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதா? அபராதம் விதிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. இதேபோல், 400 மெட்ரிக் டன் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்தகட்டமாக வேறு நிறுவனங்களிடம் இருந்து தரமான வெங்காயம் கொள்முதல் செய்யப்படுமா? அப்படி கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் கிலோ ரூ.35 என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.