மாணவியின் அறையில் ரகசிய கேமரா... அதிர்ச்சியில் உறைந்துபோன மாணவி... கையும் களவுமாக சிக்கிய வீட்டு உரிமையாளர் மகன்...வெளிவந்த பகீர் சம்பவம்... நடந்தது என்ன...?
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்திடப் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைவதை விட அதிகரித்திருப்பது வேதனையை அளித்துள்ளது.இன்னும் சொல்லப்போனால் குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் காவல் துறை, நீதிமன்றங்களிடம் சுணக்கம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் தலை விரித்தாடி வருவது பாதுகாப்பற்ற நாட்டில் இருப்பதாக பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில், சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் வாடைகை வீட்டில் தங்கி படித்த மாணவியின் கழிவறை மற்றும் படுக்கையறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஷகர்பூரில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கி இளம்பெண் ஒருவர் , சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவிக்கு தன்னை யாரோ கண்கானித்து வருவது போல் ஒரு வித உணர்வு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய வாட்ஸ் அப் கணக்கை வேறு யாரோ ஒருவர் கண்காணிப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனது அறை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய மாணவி குளியல் அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அறையில் இருந்த குண்டு பல்பில் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளார் மாணவி.உடனே அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாணவியின் வீட்டிற்கு வந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அவருடைய படுக்கையறை பல்பிலும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வீட்டு உரிமையாளரின் மாற்றுத்திறனாளி மகனான கரண் என்பவரிடம் விசாரணை செய்தனர்.
மாணவி சொந்தஊருக்குச் செல்லும்போது வாடகை வீட்டு சாவியை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற நிலையில் அந்த சமையத்தை பயன்படுத்திக் கொண்ட மாற்றுத்திறனாளியான கரண், எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் பொதுவாகக் கிடைக்கும் ஸ்பை கேமராக்களை வாங்கி அவரது அறைகளில் பொருத்தியது தெரியவந்துள்ளது. இந்த கேமராக்களை ஆன்லைனில் இயக்கமுடியாத நிலையில் அதில் பதிவாகும் காட்சிகளை மெமரி கார்டுகளில் சேமிக்கப்படும் விதமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் கரண் மெமரி கார்டுகளில் இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்காக மாணவியின் அறையில் மின் பழுது இருப்பதாகக் கூறி, பலமுறை அவரிடம் அறையின் சாவியை கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் பல்பில் வைக்கப்பட்ட ஸ்பை கேமராவின் மெமரிகர்டுகளில் இருந்து வீடியோக்களை தனது லேப்டாப்பிற்கு மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார் கரணிடம் இருந்து பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை சேமிக்கப் பயன்படுத்திய ஸ்பை கேமரா , இரண்டு லேப்டாப்களை கைப்பற்றிய நிலையில் கரணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.