வலிப்பு நோய் நாடகம்
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி கிளை சிறையில் ஒரே அறையில் இருந்த 17 கைதிகள் வலிப்பு நாடகத்தை அரங்கேற்றி, காவலர் தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 காவலர்களை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆகினர். கொ* முயற்சி, போதைப்பொருள், திருட்டு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொட ர்புடைய கைதிகளை பிடிக்க ஒருவருக்கு ஒரு தனிப்படை என்ற கணக்கில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தீவிர தேடுதல் வேட்டை
குறிப்பாக, தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல்வேட்டை நடந்தது. திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லைகள் மற்றும் தமிழக-கேரள எல்லைகளில் உள்ள 16 சோதனைச்சாவடிகளை ஒருபக்கம் அலெட்ர்ட் செய்த அதிகாரிகள் மறுபக்கம் சிறையை சுற்றியுள்ள வயல் மற்றும் மலைகளையும் அலசி ஆராய்ந்தனர்.
இதில், கணித்ததுபோலவே சிறைக்குப்பின்னால் உள்ள வனப்பகுதியில் மதுரையைச் சேர்ந்த பிரவீன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய 4 பேர் சிக்கினர்.
சிக்கிய மாற்றுத்திறனாளி
அதேபோல், சிறையிலிருந்து சில அடி தூரத்திலேயே மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விசாரணை கைதியான பிரசாந்த் என்ற லிங்கபிரசாந்த்தும் பிடிபட்டுள்ளார். தேனி கண்டமனூர் சாலையில் சென்ற ஷேர் ஆட்டோவில் ஏறிய லிங்கபிரசாத், கானா விலக்கு மருத்துவமனையில் இறக்கி விடுமாறும், ஆனால் தன்னிடம் பணம் இல்லை வீட்டுக்கு சென்று ஜிபே மூலம் நிச்சயம் பணம் செலுத்துவதாகவும் கூறி உள்ளார்.
ஆட்டோவில் தப்பிய போது...
இதனிடையே, பின்னால் பைக்கில் வந்த ஒரு கான்ஸ்டபிள் ஆட்டோவின் குறுக்கே வழிமறித்துள்ளார். கான்ஸ்டபிள் வருவதை கண்ணாடியில் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநரும் நேக்காக வண்டியை நிறுத்தி உள்ளார். அதன்பிறகு, வாகனத்தில் இருந்த ஒரு பெண்மணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட ஓட்டுநர் லிங்க பிரசாத்தையும், கான்ஸ்டபிளையும் சிறை வளாகத்தின் முன்பு இறக்கிவிட்டுள்ளார்.
டிரோன் காட்சியில்...
5ஆவது கைதி இப்படி பிடிபட்ட நிலையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் மற்ற கைதிகளையும் தேடும் பணி தொடர்ந்து நடந்தது. அதில், சிறையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு பொட்டல் காட்டில் 8 பேர் இருந்தது தென்பட்டது.
மதுரையை சேர்ந்த கருப்பசாமி என்ற மதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, சோலை முகிலீஸ்வரன் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தருண்குமார், ராமநாதபுரத்தை சேர்ந்த பாண்டி செல்வம், சேலத்தை சேர்ந்த சபரிநாதன் ஆகிய 8 பேரையும் காவல்துறையினர் கொத்தாக கைது செய்தனர்.
தப்பி ஓடிய 17 பேரில் 13 பேரை மடக்கி பிடித்த போலீசார் மதுரையை சேர்ந்த திருப்பதி, பொன்முத்துசெல்வம், மீனாட்சி சுந்தரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜின் ஆகிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் பொன்முத்து, ரெஜின் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 15 பேர் சிக்கிய நிலையில் போக்கு காட்டும் இருவரை, கைதானோர் அளித்த வாக்குமூலத்தின்படி அம்மச்சியாபுரம் மலையை சுற்றி வளைத்து போலீசார் தேடி வருகின்றனர்.