ரத்த சர்க்கரை அளவில்...
உணவை உட்கொள்ளும் வரிசையை மாற்றுவது, அதாவது 'Meal Sequencing' முறையானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு முன்பாக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
உணவு வரிசை முக்கியம்
நாம் அன்றாடம் சாப்பிடும் தட்டில் உள்ள உணவுகளின் உண்ணும் வரிசை மிகவும் முக்கியமானது. ஹைதராபாத் கிம்ஸ்-அரேட் மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் எண்டோகிரினாலஜி நிபுணர் டாக்டர் பிரத்விராஜ் சனமந்திரா, உணவை உண்ணும் முறையை மாற்றுவதே 'Food Sequencing' என வரையறுக்கிறார். உணவில் முதலில் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும், இரண்டாவதாக புரதச்சத்து உணவுகளையும், இறுதியாக சாதம், ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
இந்த முறை குறிப்பாக நீரிழிவு நோய் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய பலன்களைத் தரும் என்கிறார் பிரத்விராஜ்.
சாப்பிடுவதற்கு முன்னர்...
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் மனிஷா சோப்ரா, நார்ச்சத்தும் புரதச்சத்தும் வயிற்றை விரைவில் நிறைவு செய்ய உதவக்கூடியவை, மற்ற உணவுகளைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு கிண்ணம் சாலட் அல்லது காய்கறிகளைச் சாப்பிட்டுவிட்டு, மெதுவாக உணவை உட்கொள்ள வேண்டும் என்று டிப்ஸ் தருகிறார்.
கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது நோக்கமல்ல, மாறாக அவற்றைச் சரியான அளவில் உட்கொள்வதே இதன் அடிப்படை. Prediabetes, PCOS, இன்சுலின் எதிர்ப்புத் திறன் மற்றும் டைப்-2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த உணவு வரிசை மிகவும் ஏற்றது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் அறிவுறுத்தல்
ஆனாலும், உணவின் வரிசையை மாற்றி உட்கொள்வது நேரடியாகக் கொழுப்பையோ கலோரிகளையோ எரித்து விடாது. உணவின் வரிசையை மாற்றுவதால் மட்டுமே உடல் எடை குறையாது. ஆனால், கலோரிகளின் அளவைக் குறைக்க உதவும் ஒரு எளிய பழக்கமாக இதனைப் பின்பற்றலாம்.
உணவு வரிசையை மாற்றுவது உடல் எடையைக் குறைப்பதற்கான குறுக்குவழி அல்ல என்றாலும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும் ஒரு சிறந்த எளிய பழக்கமாக இருக்கும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.