கே.என்.நேரு இல்ல திருமண விழாவில்...
திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் – சங்கரி ரவிச்சந்திரன் ஆகியோரின் மகன் விஷால் நாராயண் – பெங்களூரு ஜெகதீஷ் பாட்டில் – அனுபமா ஜெகதீஷ் பாட்டில் ஆகியோரின் மகள் ரிஷா பாட்டில் திருமணத்தை சென்னை நீலாங்கரையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நவம்பர் 16ஆம் தேதி நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
இங்கு எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நேருவினுடைய பணிகளைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். அதுவும் குறிப்பாக, அவர் அமைச்சராக இல்லை என்று சொன்னாலும், இன்றைக்கும் அவர் அமைச்சராகத்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
வெட்கமாக இருக்கிறது...
என்னைப் பற்றிச் சொல்லுகிறபோது, ’ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் நீங்கள்தான் எங்களுக்கு முதல்வர்,’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது இருக்கக் கூடிய சூழ்நிலையிலே, நேரு தான் அமைச்சராக இருக்கிறார் என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு கொடுமையான ஆட்சியாக இருக்கிற காரணத்தால், நான்தான் முதலமைச்சராக இருக்கிறேன் என்று சொல்வதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்.
அதை இனிமேல் சொல்லாதீர்கள்.
ஏனென்றால், ஒரு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நம்முடைய ஆட்சி உதயமாகத்தான் போகிறது. எனவே, அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைக்கும் நேருவை நோக்கி வரக்கூடிய அந்தச் சோதனைகள், வேதனைகள் எல்லாம் உங்களுக்குப் புரியும். அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சட்டப்படி நீதிமன்றத்திற்குச் சென்று, ‘நான் வென்று காட்டுவேன்,’ என்ற பிடிவாதத்தோடு, உள்ள உறுதியோடு பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியவர்.
திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல்
விரைவில், திருச்சி கிழக்கிலே இடைத்தேர்தல் வரப்போகிறது. ஆறு மாத காலமாகத் தமிழ்நாட்டிலே ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னிக்கவும், ஆட்சி என்று சொல்லக் கூடாது. அது ஒரு காட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.
அது வெத்து வேட்டாகத்தான் ஒரு சீன் காட்டிக் கொண்டிருப்பதைப் போல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலே மிகப்பெரிய ஏமாற்றம்தான் உருவாகியிருக்கிறது.
திரையிலே கதாநாயகனாக நடித்து, இன்றைக்கு நிஜத்திலே ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக இருக்கிறார்.
எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமை, வன்கொடுமைதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வன்கொடுமைகளுக்கு ஆளாக்கக் கூடியவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட மக்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்தப் பாலியல் கொடுமைகளுக்கெல்லாம் காரணமாக இருக்கக் கூடியவர்கள் யார்? என்பதைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.
தவெக கட்சிக்கு, ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயரை வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும்.
’தூய சக்தி, தூய சக்தி,’ என்று கூறி, இன்றைக்கு ஒரு கொடுமையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. மனு கொடுக்க வந்தவரை, துணை சபாநாயகர் தாக்கியிருக்கிறார்.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கு, அதுவும் பெண்ணாக இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியருக்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அந்தச் செய்தியை முதன்முதலில் வெளிப்படுத்தி அதை மக்களுக்கு அறிவித்தவர் சகோதரி கனிமொழிதான். முதன்முதலில் மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். அதற்குப் பிறகுதான் அது தெரியவந்தது.
இதைப் பற்றிக் கேட்டால் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். ஆனால், சட்டத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்? அதெல்லாம் இல்லை, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்கிறார்.
ஆனால், இன்னும் சில அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள்? புகார் முறையாகக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆக, இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல சூழல் அமையும்...
இதற்கெல்லாம் முடிவுகட்ட விரைவில் நல்ல சூழல் அமையும். இதற்கெல்லாம் முடிவுகட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நாம் இப்பொழுதே தயாராக இருக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.