இபிஎஸ் கணக்கு  நியூஸ்தமிழ்24x7
அரசியல்

இபிஎஸ் கணக்கு, அரசியலில் அதிரடி திருப்பம்?

அதிக எதிர்பார்ப்புகளுடன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவியவர்கள், நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்களே என்ற வருத்தத்தில் இருப்பதாகவும், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க இபிஎஸ் ரகசிய கணக்குப்போட்டு கொண்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Azhagiri Arumugam

50 சதவீதம் பேரை இழுத்தாலே பெரிய திருப்பம்தான் என்ற ஃபார்முலாவில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிருப்தியாளர்களுக்கு இபிஎஸ் வலை விரித்துள்ளதாகவும், அதனால் அடுத்த சிலநாட்களில் அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தவெக ஆட்சி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில்...

பழுத்த அரசியல் சாணக்கியர்களின் மதிநுட்பங்களை எல்லாம் தூள் தூளாக்கிய தேர்தல் என்றால் அது 2026 சட்டமன்ற தேர்தல்தான். அடித்துச் சொல்கிறோம், ஆளும் நாற்காலி இந்த முறையும் நமக்குதான் என்ற கனவில் இருந்த திமுகவிற்கு நடந்து முடிந்த தேர்தல் அதிர்ச்சி என்றால் அதிமுகவிற்கு பேரதிர்ச்சிதான்.

எதிர்க்கட்சி இருக்கையும் கைவிட்டுப்போனதால், 47 சட்டமன்ற உறுப்பினர்களோடு அடுத்து என்ன செய்யலாம்? என நின்று கொண்டிருந்தது அதிமுக.

தவெக உடன் கூட்டணி...

என்னதான் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் பெரும்பான்மை இல்லை, இதுதான் நல்ல சான்ஸ், விசிலுடன் கூட்டணி அமைத்து இலையை செழிப்பாக்கலாம், எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு உரமிடலாம் என மூத்த நிர்வாகிகள் இபிஎஸ்சுக்கு ஆலோசனை கொடுத்தனர். ஆனால், அதனை அவர் காதில் வாங்கவில்லை என தெரிகிறது.

தொடர் தோல்வியே துரத்தி துரத்தி அடிக்கிறது, ஆனாலும் இபிஎஸ் ஒற்றைக்காலில் நின்றால் என்ன அர்த்தம் என கடுப்பான வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தவெக பக்கம்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

அதேபோல் மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்ட சிலர் தங்கள் பதவியையே துச்சமென மதித்து தூக்கிபோட்டுவிட்டு தவெக பக்கம் தாவினர்.

தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த கோபத்தில் வேலுமணி தரப்பினரின் கட்சிப்பதவிகளை பறித்து இபிஎஸ் தனது பவரை காட்டியது, அதன்பிறகு கட்சித்தாவல் நடவடிக்கைக்கு பயந்து மீண்டும் அவர்கள் தாய்க்கழகத்திற்கே வந்தது, அதன்பிறகு பறித்த பதவிகளுக்கு பதில் அலங்கார பதவிகளை கொடுத்து வாயை அடைக்க பார்த்தது, நாங்கள் என்ன சிறுபிள்ளையா? அதற்கு பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என வேலுமணி அணி அதே அதிருப்திலேயே தொடர்ந்து கொண்டிருப்பது தனிக்கதை.

பொறுப்பு ஏதுமின்றி...

இந்த அதிருப்தி எம்எல்ஏக்களை போன்றே மாவட்ட செயலாளர்கள், மாநில அளவிலான நிர்வாகிகளும் பதவிகளை துறந்துவிட்டு தவெக பக்கம் தாவினர். ஏற்கெனவே அதிமுகவில் அதிக செல்வாக்குடன் இருந்த அவர்கள் புதிய கட்சியில் அதைவிட புதிய பொறுப்புகளும், முக்கியத்துவமும் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், மாதங்கள்தான் கடந்ததே தவிர பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

கடுமையான அழுத்தத்திற்கு பிறகுதான் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலருக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

சொல்லப்போனால், அதிமுகவில் இருந்து வந்த 90 சதவீதம் பேருக்கு தவெகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மையென அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக கணக்கு

குழம்பிய குட்டையில்...

பதவி கிடைக்காதவர்களுக்கு தான் இந்த ஏக்கமென்றால், பதவியை பெற்றவர்களோ, ஆமா கிடைத்து மட்டும் என்ன புண்ணியம் உள்ளூர் தவெக நிர்வாகிகளிடம் இருந்து உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என புலம்புகிறார்களாம்.

இப்படியே சென்றால் நம் அரசியல் எதிர்காலம் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுமோ? அடுத்து என்னதான் செய்வது? என இருதரப்பினருமே தவித்து வருவதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது. இதனை நன்கு அறிந்து கொண்ட இபிஎஸ், ”குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க வேண்டும்” என்ற கணக்கில் காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டாராம்.

பொறுப்பு கிடைக்குமா?

அதிமுகவில் இருந்து தவெக பக்கம் சென்ற முன்னாள் எம்.பி.க்களான பாலகங்கா, கே.என்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை வனரோஜா, நெல்லை வசந்தி முருகேசன், திருச்சி இளவரசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான அரக்கோணம் சு.ரவி, கலசப்பாக்கம் பன்னீர், ஆற்காடு சீனிவாசன், பூங்கா நகர் சீனிவாசன், முன்னாள் டி.ஜி.பி. நடராஜ், தேனி தவசி, சேலம் செம்மலை உள்ளிட்டோர் ஏன்தான் அதிமுவில் இருந்து வந்தோமோ? என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

அதேபோல், மாவட்ட அளவில் கப்பச்சி வினோத், திருவண்ணாமலை ராஜன், சென்னை ராஜேஷ் உள்ளிட்டோருக்கும் வருத்தம்தானாம்.

இது தவிர, அதிமுக தொழிற்சங்கத்தில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அது சரி, முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கே ஒன்றுமில்லாதபோது மற்றவர்களுக்கு மட்டும் பொறுப்பு கிடைத்துவிடுமா?

அதிருப்தியாளர்கள்

பேச்சு நடத்த குழு

தனியாகத் தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி, ஏற்கெனவே வகித்த பொறுப்புகளுக்கு இணையான அங்கீகாரம் வழங்கப்படும் என தொழிற்சங்கத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்பார்த்த வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை.

அதேபோல் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அமைப்புகூட இதுவரை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை.

”இக்கரைக்கு அக்கரை பச்சை” என ஓடிவந்த அதிருப்தியாளர்களை மீண்டும் கூடாரத்திற்குள் இழுப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை இபிஎஸ் கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதிருப்தியில் உள்ளவர்களுடன் யார் யார் நெருக்கம்? யார் மூலமாக தொடர்பு கொண்டால் காரியம் கனியும்? எப்படி பேசினால் மீண்டும் வருவார்கள்? என்ற கேள்விகளையும் இபிஎஸ் தயார் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இபிஎஸ் வியூகம்

மாற்று அரசியல்

அதிலும், தவெக பக்கம் சென்ற அனைவரையும் இழுக்க முடியாவிட்டாலும் 50 சதவீதம் பேரை இழுத்தாலே கட்சி வலிமையாகும் என கணக்குப்போடும் இபிஎஸ், எதிர்காலத்தில் மற்ற நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்லாமல் தடுக்க முடியும் எனவும் நம்புகிறாராம்.

பொறுப்புகள் கொடுத்தால் தொடர்ந்து செயல்படுவோம், இல்லையெனில் மாற்று அரசியல் முடிவை எடுக்கும் நிலைப்பாட்டில் அதிருப்தியாளர்கள் உள்ளார்களாம்.

அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து தவெக தங்கள் பக்கம் வைத்துக் கொள்ளுமா? அல்லது அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே சென்று அடுத்த சில நாட்களில் அரசியலில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.