சென்னையில் 140 கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவர் எழுப்பியிருக்கும் இந்த விமர்சனம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
திமுக தலைவரின் விமர்சனம்
ஒரு வீடியோ கேமில் வரும் கற்பனை நகரம், நிஜ அரசியலில் இவ்வளவு பெரிய விவாதத்தை உருவாக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். போதைப்பொருள், கார் கடத்தல், குற்றச்செயல்கள், கட்டுக்கடங்காத அராஜகங்களுக்கு பெயர்போன Grand Theft Auto கேமின் வைஸ் சிட்டி நகரத்தை கையில் எடுத்து, தவெக ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு என்று ஸ்டாலின் முன்வைத்திருக்கும் விமர்சனம், தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதத்தை கிளப்பியுள்ளது.
நவம்பர் 19ம் தேதி சென்னை மாதவரம் அருகே மத்திய வருவாய் புலனாய்வு துறையான DRI அதிகாரிகள் நடத்திய சோதனையில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்படவிருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நாகையில் சுமார் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை DRI அதிகாரிகள் பிடித்திருந்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் தவெக நிர்வாகி மெத் பூபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவமும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுள்ள ஸ்டாலின், இவ்வளவு பெரியளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதை மாநில காவல்துறையால் ஏன் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சிறப்பு படைகள் எங்கே?
இந்த விவகாரத்தில், ஸ்டாலின் எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்வி, போதைப்பொருள் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள 65 சிறப்பு படைகள் பற்றியது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க 65 Anti-Narcotics Task Force பிரிவுகளை அமைக்கவும், இதற்காக 264 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 37 மாவட்டங்களுக்கும் தலா ஒரு பிரிவும், மாநகர காவல் ஆணையரகங்களுக்கு 28 பிரிவுகளும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 1,600க்கும் மேற்பட்ட பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படியிருக்க, இந்த சிறப்புப் படைகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன? போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை கண்டறிவதில் அவற்றின் செயல்பாடுகள் என்ன? என்பதுதான் ஸ்டாலினின் கேள்வி.
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தின் உள்துறை முதலமைச்சர் விஜயின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இவ்வளவு முக்கியமான விவகாரத்தில் அவர் ஏன் வெளிப்படையாக பேசவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கொள்ளை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள், லாக்கப் மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிடாமல், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என்பதையும் விளக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
இதில், ஸ்டாலின் பயன்படுத்தியிருக்கும் Vice City என்ற வார்த்தைக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. உலகம் முழுவதும் பிரபலமான Grand Theft Auto வீடியோ கேமில் இடம்பெறும் கற்பனை நகரம்தான் Vice City. இந்த விளையாட்டில் கார் கடத்தல், போதைப்பொருள், குற்றச் செயல்கள் என பல்வேறு சட்டவிரோத செயல்கள் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறும்.
தற்போது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டும் ஸ்டாலின், அந்த விளையாட்டின் குற்றங்கள் நிறைந்த Vice City நகரத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு இந்த விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
வீடியோவைக் காண...