கமலின் ‘சண்டியர்’
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் புதிய திரைப்படத்துக்கு ‘சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை, கிருஷ்ணசாமி தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.
இதுதொடர்பாக, கிருஷ்ணசாமி கூறியதாவது;
கடந்த 2003ம் ஆண்டு கமல் நடிப்பில் உருவான திரைப்படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்ட போது எதிர்ப்பு எழுந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி படத்தின் பெயர் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது.
மீண்டும், ‘சண்டியர்’
தற்போது, சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படுவது சாதிய மோதல்களையும் வன்முறையையும் தூண்டும் வகையில் அமைந்துவிடும். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள ’பழிக்குப் பழி ரத்தத்தின் மூலமே தீர்க்கப்படும்’ என்ற வாசகமும் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்ப்பு ஏன்?
தமிழகத்தில் சாதிய மோதல் குறைந்து சமூக நல்லிணக்கம் நிலவும் சூழலில், இதுபோன்ற திரைப்படத் தலைப்புகளும் கருத்துகளும் சமூக அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, ‘சண்டியர்’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட திரைப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டுமென அமைச்சர் ராஜ்மோகனிடம் வலியுறுத்தினேன்.
ஏற்கெனவே ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் வந்துள்ளது. ஆனால், கமல்ஹாசன் போன்ற பிரபலம் பெயர் வைப்பது அனைவரையும் சென்று சேர்கிறது. இதனால்தான் இதை எதிர்க்கிறோம்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.