ஆபத்தான சூழல்
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது;
’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டுத்தான் நான் பேசுவேன். இப்போது தமிழ்நாடு இருக்கிற நிலையைப் பார்த்து நான் இப்படிக் கேட்டால், ‘என்ன கிண்டல் செய்கிறீர்களா?’ என்று நீங்களே என்னைத் திருப்பிக் கேட்பீர்கள்.
பெண்களைத் த.வெ.க. அரசு காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. மாறாக, த.வெ.க. கட்சியை விட்டே பெண்களைக் காப்பாற்ற வேண்டிய ஆபத்தான சூழல் தான் இப்போது நிலவுகிறது.
பயம் இல்லை...
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் வேறு எங்குமே தேடிப் போகத் தேவையில்லை. தன் சொந்தக் கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே மாநிலத்தில் நடக்கும் குற்றங்கள் பாதியாகக் குறைந்துவிடும்.
மாநிலத்தில் குற்றவாளிகளுக்குச் சிறிதும் சட்டம் குறித்த பயம் இல்லை, இந்த ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமான ஒரு 'கிரிமினல் கொண்டாட்ட ஆட்சியாக' அவர்கள் கருதுகின்றனர்.
பொறுப்பான பதில் இல்லை
தலைநகர் சென்னையின் முக்கியப் பகுதிகளிலேயே கொ*கள் அரங்கேறுகின்றன. நீதிமன்றத்தில் ஜாமினில் வெளியே வரும் குற்றவாளிகள், காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வரும்போதே ஓட ஓட விரட்டிப் படுகொ* செய்யப்படுகின்றனர்.
ஓட ஓட விரட்டிக் கொ*கள் நடப்பது, சிறைக் கைதிகள் தப்புவது, சிறுமிகள் மாயமாவது, பகிரங்கமாகக் கொ* செய்துவிட்டு குற்றவாளிகள் சாதாரணமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை எல்லாம் முதலமைச்சர் பார்க்கிறாரா இல்லையா?
இந்தச் செய்திகள் எல்லாம் அவர் காதுக்கு எட்டவில்லையா? எதுவுமே நடக்காதது போல அவரது செயல்பாடு இருப்பதுடன், எந்தவிதமான பொறுப்புள்ள பதிலும் அரசிடமிருந்து இல்லை.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நாளை அக்டோபர் 31ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் கொ*, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு
ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள தவெக அரசை கண்டித்து, திமுக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும்.
அந்தந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுபவர்கள் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்.பி கண்டன உரையாற்றுகிறார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.