அரசியல்

ரூ.3.35 கோடி கையாடல், தேர்தல் நிதி TO மணல் மாபியா - சிக்குவாரா சிவசங்கர்?

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் 3 கோடியே 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

அரசு ஒப்பந்தங்கள் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டதோடு, 9 லாரிகளையும் வாங்க வைத்து பயன்படுத்திக்கொண்டதாக கட்டுமான தொழிலதிபர் டிஜிட்டல் ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆசை வார்த்தைகள் கூறி...

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் கட்டுமான தொழிலதிபர் அருண்ராஜ். இவருக்கு, இவரது மைத்துனர் சந்தோஷ் மூலமாக அப்போதைய திமுக மாவட்டச் செயலாளராக இருந்த சிவசங்கரும், சிவனேசனும் 2016ம் ஆண்டில் அறிமுகமாகி உள்ளனர். இந்த அறிமுகம் நாளடைவில் இவர்களை தொழில் கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது.

’எங்ககிட்ட கைவசம் அரசு ஒப்பந்தங்கள் இருக்கு, உன்னை தொழிலில் கோடிகளில் புரள வைக்கிறோம்,’ என்று சொல்லப்பட்ட ஆசை வார்த்தைகளை மலைபோல் நம்பியிருக்கிறார் அருண்ராஜ். உடனே தனது நண்பரின் பெயரில் ACN டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தைதொடங்கி, 6 பெரிய லாரிகளை வாங்கியிருக்கிறார். ஒரு லாரியின் விலை சுமார் 30 லட்சம் ரூபாய்.

இந்த லாரிகள் அரியலூர் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் ஓட தொடங்கியிருக்கின்றன. ’தொழில் இன்னும் வளரும், அரசு ஒப்பந்தங்கள் வரிசையாக குமியும்,’ என்ற பகல் கனவோடு அருண்ராஜின் முதலீடுகளும் பலமாக தொடர்ந்திருக்கின்றன.

தேர்தல் செலவுகளுக்காக...

அதோடு, 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கியபோது, தேர்தல் செலவுக்காக என்று சொல்லி அருண்ராஜிடமிருந்து 25 லட்சம் ரூபாயை ரொக்கமாக கறந்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்து சிவசங்கர் அமைச்சரானதும், ’இனிமேல் மணல் மைனிங் தொழிலை கூட்டு சேர்ந்து செய்யலாம்,’ என்று கூறி, மேலும் ஒரு கோடியை நைசாக பெற்றிருக்கிறார் சிவசங்கர்.

இதோடு நில்லாமல், அருண்ராஜின் மனைவி சங்கீதாவின் பெயரிலும் மேலும் 3 லாரிகளை வாங்க சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் உடனே வாங்கி கொடுத்திருக்கிறார் அருண்ராஜ். மொத்தம் 9 லாரிகள் வாங்கப்பட்டு ஆற்று மணல், ஜல்லி தொழிலில் இறக்கப்பட்டிருக்கின்றன.

வெறும் ஏமாற்றம் மட்டும் தான்

ஆனால், சொன்னபடி அரசு ஒப்பந்தமும் கிடைக்கவில்லை, போட்ட முதலீடும் திரும்பவில்லை. கடைசியில் லாபம் என்ற பெயரில் கிடைத்ததோ வெறும் ஏமாற்றம் மட்டும்தான். ஒரு கட்டத்தில் இந்த தொழில் மோசடிகளும், ஏமாற்று வேலைகளும் பிடிக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்த அருண்ராஜ், தான் முதலீடு செய்த கோடிக்கணக்கான பணத்தையும், லாரிகளுக்கான தொகையையும் உடனடியாக திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அப்போதுதான் இவர்களின் சுயரூபம் வெளியே வர தொடங்கியிருக்கிறது.

பணம் கேட்டால் மிரட்டல்

பணம் கேட்க சென்றபோதெல்லாம், ’நாளை தருகிறோம், பிறகு பேசலாம்,’ என்று சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 15 முறைக்கும் மேலாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து கெஞ்சியும் ஒரு காசு கூட திரும்ப கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார் அருண்ராஜ்.

இதற்கு இடையே, பொறுமையிழந்த அவர் பணத்தை கேட்கச் சென்றபோது, முன்னாள் அமைச்சரின் உதவியாளர் லூயிஸ் என்ற கதிரவன் அருண்ராஜை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியதோடு, மீண்டும் பணம் கேட்டு இங்கே வந்தால், ’லாரி ஏற்றி கொன்றுவிடுவேன்’ என்று கொ* மிரட்டல் விடுத்ததாகவும் புகார் நீண்டுள்ளது.

மூன்று முறை நேரில் சந்தித்து...

இந்த விவகாரத்தில் உச்சகட்டமாக மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. தங்களது பிரச்னை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை 3 முறை நேரில் சந்தித்து கண்ணீருடன் முறையிட்டதாகவும், அதற்கு அவரது அலுவலகத்திலிருந்து சிவசங்கரின் உதவியாளரிடம் பேசி பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் சங்கீதா கூறியுள்ளார். ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் பணம் கைக்கு வரவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

ஆதாரங்களுடன் புகார்...

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட இந்த புகார் மனு, தற்போது மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் 3 கோடியே 35 லட்சம் மோசடி புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

கையில் வாட்ஸ்அப் சாட், ஆடியோக்கள், வீடியோக்கள், போட்டோக்கள் என டிஜிட்டல் அஸ்திரங்களை வைத்து கொண்டு சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் காத்திருக்கும் தொழிலதிபருக்கு விடிவுகாலம் பிறக்குமா? இந்த ஆதாரங்கள் யாரை காப்பாற்றும், யாரை கூண்டில் ஏற்றும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.