துரைமுருகன் இல்ல திருமணம் நியூஸ்தமிழ்24x7
அரசியல்

துரைமுருகன் வீட்டு விழாவில் சமஸ்கிருதம் - ஊருக்கு நாத்திகர், உள்ளுக்குள் ஆத்திகர்?

மூலை முடுக்கெங்கும் சுயமரியாதை திருமணத்தை அறிமுகம் செய்து வைத்த திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டு திருமண விழா, புரோகிதர்கள் முன்னிலையில் சமஸ்கிருத மந்திரம் ஒலிக்க பிரமாண்டமாக நடந்து முடிந்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

Azhagiri Arumugam

துரைமுருகன் இல்ல திருமணம்

திமுகவின் மேடையில் சமஸ்கிருதத்தை, ‘செத்துப் போன மொழி’ என நரம்பு புடைக்க பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன், தற்போது தன் வீட்டு விஷேஷத்தை மட்டும் சமஸ்கிருத மந்திரம் ஒலிக்க நடத்தியிருப்பது சொந்த கட்சியினரையே அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.

சமஸ்கிருத எதிர்ப்பு, பிரமாண வெறுப்பு என்பதெல்லாம் வெறும் மேடை அலங்கார வார்த்தைகள் என்பதை வெளிச்சம் போட்டும் காட்டும் வகையில் திமுகவின் பொதுச் செயலாளர் வீட்டு திருமணமே நடந்தேறியது.

விமர்சனம்

‘மாங்கல்யம் தந்துனானே’

ஹோமம் வளர்த்து, அக்னி சாட்சியாக, ‘மாங்கல்யம் தந்துனானே,’ என சமஸ்கிருதத்தில் புரோகிதர்கள் மந்திரம் பாட, திருவிழா போல நடக்கும் திருமண விழாவை பார்த்து ஏதோ கடவுள் மீது தீராப் பற்று கொண்டவர்களின் இல்லத் திருமண விழா என மறந்தும் கூட நினைத்து விட வேண்டாம். பெரியாரின் கடவுள் மறுப்பை, கொள்கையாக ஏற்றுக் கொண்ட திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டு திருமணம் தான் இது.

திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தியும், எம்.பி., கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான கண்ணன் ரவியின் மகனுமான தீபக் ரவிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

வந்தவர்கள் வாயடைத்து போகும் அளவுக்கு விருந்தும், உபசரிப்பும் இருக்க பிரமாண்டம் என்பதற்கு இன்னொரு அர்த்தமாக இருந்தது அந்த திருமண விழா.

சொந்தக் கட்சியினரே...

கிளுகிளுப்பான ஆட்டம், யுவன் சங்கர் ராஜாவின் இசை கச்சேரி என களை கட்டிய இந்த திருமண விழாவின் பட்ஜெட் என்னவாக இருக்கும்? என்ற விவாதம் ஒரு பக்கம் கிளம்பியிருக்க, இன்னொரு பக்கம் புரோகிதர்கள் முன்னிலையில் வைத்து திருமணம் நடத்தியது கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

பிராமண எதிர்ப்பு காரணமாக தந்தை பெரியார் அறிமுகம் செய்து வைத்தது தான் சுய மரியாதை திருமணம்.

சுய மரியாதை திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கியது பேரறிஞர் அண்ணா. அந்த வகையில், பெரியாரை கொள்கை தலைவராக ஏற்று அண்ணா தொடங்கிய திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு, தன் வீட்டு கல்யாணத்தை மட்டும் புரோகிதர்களை வைத்து துரைமுருகன் நடத்தியிருப்பது, சொந்த கட்சியினருக்கே கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

திமுக கொள்கை

மந்திரம் ஒலிக்க...

அண்ணா கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தை அவமதிக்கும் வகையில், திமுக பொதுச் செயலாளர் வீட்டு திருமணம் நடந்திருப்பது திமுகவினரை விம்மி பொரும வைத்திருக்கிறது. எந்த திருமண விழாவுக்கு சென்றாலும் சுயமரியாதை திருமணங்களை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது திமுக தான் என மு.க.ஸ்டாலின் பெருமைப்பட்டுக் கொள்வார்.

ஆனால், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டு கல்யாணம் சமஸ்கிருத மந்திரம் ஒலிக்க ஆரிய வேத முறைப்படி சடங்கு, சம்பிரதாயத்துடன் சுபமுகூர்த்த நேரம் பார்த்து ஷேமகரமாக நடந்தது தான் வினோதமும் வேடிக்கையும்.

தமிழ் தமிழ் என பேசி விட்டு...

கடைக்கோடியில் கடவுள் பற்று கொண்ட திமுக தொண்டர்கள் வீட்டு கல்யாணம் வேத மந்திரங்கள் ஒலிக்க நடந்தாலே விமர்சனங்களை சந்திக்கும். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் வீட்டு கல்யாணம் சமஸ்கிருத மந்திரம் ஒலிக்க நடந்திருப்பதை பார்க்கும் போது, சமஸ்கிருத எதிர்ப்பெல்லாம் பொய்யா? என்ற கேள்வியை தான் எழுப்புகிறது.

ஒரு முறை திமுக மேடையில் பேசிய துரைமுருகன், சமஸ்கிருதத்தை ’செத்துப் போன மொழி,’ என கொந்தளித்திருப்பார். தற்போது செத்துப் போன மொழிக்கு தனது பேத்தி கல்யாணம் மூலம் உயிர் கொடுத்து வலிய வாங்கிக் கட்டிக் கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் துரைமுருகன்.

தமிழ் தமிழ் என பேசி விட்டு, சமஸ்கிருத மொழியில் திருமணத்தை நடத்துவது தான் தமிழ் உணர்வா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

துரைமுருகன் பேச்சு

என்ன பேசினார் ஸ்டாலின்?

முதலில் புரோகிதர்களை வைத்து மந்திரம் ஒலிக்க தாலி கட்டி திருமணம் நடைபெற்ற நிலையில், பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் மாலை மாற்றும் படலம் மட்டும் நடந்திருக்கிறது. ஒருமுறை சுய மரியாதை திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், மேடையில் உரையாற்றும் போது, ’புரோகிதர்களை வைத்து திருமணத்தை நடத்தினால் அக்னி குண்டத்தை எரிய விட்டு கண் எரிச்சல் வர வைத்து விடுவார்கள். புரோகிதர்கள் என்ன பேசுகிறார்கள் என மண்டபத்தில் யாருக்குமே புரியாது,’ என்றெல்லாம் கிண்டலடித்து கூறியிருப்பார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் பேசியது பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டு திருமணத்திற்கு மட்டும் பொருந்தாமல் காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கிறது.

ஆரிய வேத முறைப்படி...

பொதுச் செயலாளர் துரைமுருகனின் செயலை பார்த்து சில திமுகவினர், பேராசிரியர் அன்பழகனை நினைவுகூர்ந்து வருகின்றனர். ஒரு முறை தொண்டன் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க சென்ற அவர், வேத மந்திரம் ஒலிக்க திருமண சடங்கு நடைபெற்றதை பார்த்து திருமணத்திற்கு செல்லாமல் வெளியேறியதை சுட்டிக்காட்டி, அன்பழகன் வகித்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கொண்டு துரைமுருகன் இப்படி செய்யலாமா?

வாயளவில் மட்டும் கொள்கையில் பேசிக் கொள்வதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சுமார் அரை நூற்றாண்டை கடந்து 60 ஆண்டு காலமாக திமுகவில் பயணித்து, பொருளாளர், பொதுச் செயலாளர் என முக்கிய பதவிகளில் இருந்த துரைமுருகனே, பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு மாறாக சுயமரியாதை திருமணத்தை புறந்தள்ளி ஆரிய வேத முறைப்படி வைதீக திருமணத்தை நடத்தியிருப்பது முகம் சுழிக்கும்படியாக அமைந்திருக்கிறது.

துரைமுருகன் பேத்தி

ஊருக்குத் தான் உபதேசம்

தங்கள் வீட்டு திருமணத்தை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்வது அவரவர் இஷ்டம். ஆனால், பொது வாழ்வில் இருக்கும் துரைமுருகன் மாதிரியான நபர்கள், தங்களின் மேடை பேச்சுக்கும், செய்யும் செயலுக்கும் முரண்படுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுகவின் HARD CORE கொள்கைகளில் ஒன்று பிராமணர்கள் எதிர்ப்பு. பிராமணர்களை கட்சியில் சேர்க்கக் கூடாது என விதியே இருக்கிறது. ஆனால், அந்த பிராமணர்கள் முன்னிலையிலேயே திருமண விழா நடத்தியிருப்பது எவ்வளவு பெரிய நகை முரண் என்பதோடு, ஊருக்கு தான் உபதேசமா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமணர்கள் வெறுப்பு என சில்லிடை வைப்பது போல மேடைகளில் பேசுவதெல்லாம் அலங்கார வார்த்தைகளே தவிர, அடிமனதில் இருந்து வரும் கொள்கை வார்த்தைகள் அல்ல என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறது துரைமுருகன் வீட்டு திருமணம்.

கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை பொதுச் செயலாளர் என்ற முறையில் முரசொலியில் துரைமுருகன் தான் அறிவிப்பார். கிட்டத்தட்ட துரைமுருகன் தன் பேத்திக்கு நடத்திய திருமணமும் கட்சி கட்டுப்பாட்டை, கொள்கையை மீறிய செயலாகவே மாறியிருக்கிறது.

ஆகையால், துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

துரைமுருகன் இல்ல திருமணம்