அரசியல்

போஸ்ட்மேனிடம் உதயநிதிக்கு என்ன வேலை? மாணிக்கம் தாகூர் விமர்சனம்

எந்த ஆளுநரை போஸ்ட்மேன் என விமர்சனம் செய்தாரோ அதே போஸ்ட்மேனிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு என்ன வேலை? என கிண்டலடித்துள்ள மாணிக்கம் தாகூர், அதிகாரம் இல்லாததால் சரணாகதி அடைந்துள்ளாரா? என விமர்சனம் செய்துள்ளார்.

Azhagiri Arumugam

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்த கேள்வியின்போது உதயநிதியின் தஞ்சை பேச்சையெல்லாம் எப்படி நார்மலைஸ் செய்கிறீர்கள்? என செய்தியாளர்களிடமும் பாய்ந்துள்ள மாணிக்கம் தாகூர், ’திமுக ஐடி விங்கை அல்ற சில்றை’ எனவும் சாடி உள்ளார்.

ஆளுநருடன் உதயநிதி சந்திப்பு

’தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ எனக்கோரி ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்து மனு அளித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், 2023 ஆகஸ்ட் 20ஆம் தேதி திமுக சார்பில் நடந்த ஒரு போராட்டத்தின்போது உதயநிதி பேசிய வீடியோ கிளிப்பை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ஆளுநரை போஸ்ட்மேன் என மேடையில் விமர்சித்துவிட்டு இன்று அதே போஸ்ட்மேனிடம் மனு கொடுக்க வரிசையில் நிற்பதாக கிண்டலடித்துள்ளார்.

மேலும் அதிகாரம் கையில் இருந்தபோது, “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என முழங்கியவர்கள், இன்று அந்த அதிகாரம் கைவிட்டுப் போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சரமாரி கேள்வி எழுப்பி காங். தலைவர்

தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணிக்கம் தாகூரிடம் முதல் கேள்வியாக உதயநிதி குறித்துதான் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். எந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு விமர்சனம் செய்தாரோ அதே வீடியோவையே ஆன் செய்து செய்தியாளர்களை 2 முறை கேட்க செய்த அவர், போஸ்ட்மேனிடம் உதயநிதிக்கு என்ன வேலை?

தொகுதி மறுவரையறைக்கான டீலிங் முடிந்துவிட்டதா? அமலாக்கத்துறை வழக்கு எல்லாவற்றையும் ஊத்தி மூடிவிட்டார்களா? அமலாக்கத்துறைக்கு பயந்து செட்டில்மெண்ட் முடிந்துவிட்டதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

கேள்விக்கு மேல் கேள்வி

அதேபோல் எம்எல்ஏ விக்னேஷ் குறித்து கேள்வி கேட்டபோது, உதயநிதியின் டபுள் மீனிங் பேச்சையெல்லாம் எப்படி நார்மலைஸ் செய்கிறீர்கள்? என மாணிக்கம் தாகூர் பாய, கேட்ட கேள்விக்கான பதில் இது இல்லையே என பெண் செய்தியாளர்கள் உள்ளிட்டோரும் கோரஸாக கூற, உதயநிதியை பேசினால் ஏன் இவ்வளவு கொதிக்கிறீர்கள்? ஜம்பிங் பாய்ஸாக மாறுகிறீர்களே ஏன்? பெண் செய்தியாளருமா கொதிப்பது?

தஞ்சையில் உதயநிதி பேசியதுபோன்று வேறு யாராவது பேசி இருந்தால், உரித்து தோலை தொங்க விட்டிருக்க மாட்டீர்களா? என கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினார்.

திமுக ஐடி விங் மீது விமர்சனம்

அதேபோல், திமுக ஐடி விங்கை அல்ற சில்றை என விமர்சனம் செய்த மாணிக்கம் தாகூர், முட்டுக் கொடுப்பது என்றால் என்னவென்று தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.

அதோடு, ஆளும் அரசு நேர்மையாக இருப்பதுதான் திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அவர்கள் ஆட்சி காலத்தில் செய்த தில்லுமுல்லு வேலையெல்லாம் வெளிச்சத்திற்கு வருகிறதே என்ற ஆதங்கம்தான் அவர்களை தூங்கவிடாமல் செய்வதாகவும், சட்டமன்ற விளையாட்டுத்துறை மானியத்தின்போது வராமல் வீட்டில் தூங்கிய உதயநிதியெல்லாம் வெளியில் வாய் திறந்து பேசலாமா? எனவும் சாடினார்.

வீடியோவைக் காணலாம்