அதிமுகவுக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்த பனிப்போர், தற்போது பகிரங்க வார்த்தை போராக வெடித்திருக்கிறது. இபிஎஸ் - வேலுமணி இடையிலான இந்த புதிய அதிகார யுத்தத்தின் பின்னணி என்ன?
குளிரிலும் கொளுந்து விட்டு எரிவதன் பின்னணி
2026 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் தொடங்கிய சலசலப்பு, இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடந்த மே மாதம் தவெக ஆதரவு விவகாரத்தில் எழுந்த உட்கட்சி பூசல், ஜூன் மாத சமரசத்திற்கு பிறகு சற்று அடங்கியது போல தோன்றியது. ஆனால், அக்டோபர் மாத இடைத்தேர்தல் தோல்விகள் கட்சிக்குள் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.
ஆறிப்போனதாக நினைத்த நெருப்பு, நவம்பர் மாத குளிரிலும் கொளுந்துவிட்டு எரிந்து வருவதன் பின்னணியில் பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இரண்டு கோடியில் ஒருவர்
இந்த புதிய மோதலுக்கு திரி கொளுத்தியது கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டிதான். பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற வேலுமணியின் வலியுறுத்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒரு நபர்தான் வேலுமணி.
அவர் பேச்சை கேட்டுக்கொண்டு இதை கேட்காதீர்கள் என போகிற போக்கில் அலட்சியமாக பேசினார் இபிஎஸ். கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த தன்னை, தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் தலைமை புறக்கணிப்பதாக உணர்ந்த வேலுமணி, அடுத்த நாளே காட்டமான அறிக்கையோடு களமிறங்கினார்.
இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவன் என்பதே தனக்கு பெருமைதான். ஆனால், அந்த இரண்டு கோடி தொண்டர்களால்தான் நீங்கள் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள் என தலைமையின் அதிகார பீடத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார் வேலுமணி.
இந்த மோதலுக்கு, கடந்த மே மாதமே அடித்தளம் போடப்பட்டுவிட்டது. 108 இடங்களை கைப்பற்றிய தவெக அரசுக்கு ஆதரவாக வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், அவர்களின் பதவிகளை பறித்தார்.
இடைத்தேர்தலில் 3வது இடத்தில் அதிமுக
பின்னர், மே 27ல் சமரசம் ஏற்பட்டு, ஜூன் 25ல் வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி திரும்ப வழங்கப்பட்டாலும், அவரது அரசியல் கோட்டையான கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி பொள்ளாச்சி ஜெயராமனிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாவட்ட பொறுப்புகளை கேட்டு அதிருப்தி அணி கொடுத்த அழுத்தத்தை இபிஎஸ் கண்டுகொள்ளாததே உள்ளுக்குள் தீராத கசப்பாக புகைந்து கொண்டிருந்தது.
வெளியில் அமைதியும், உள்ளுக்குள் அதிருப்தியுமாக இருந்த அதிமுகவில், கடந்த அக்டோபர் மாத இடைத்தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், இரட்டை இலை 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது, மீண்டும் முனுமுனுப்பை உண்டாக்கியது.
முற்றியது முரண்பாடு
இதையடுத்து, அக்டோபர் 12ம் தேதி வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகள் நடத்திய ரகசிய ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனி ஆவர்த்தனம் செய்வதா?, தலைமையின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதா? என அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 18ல் இபிஎஸ் ஆதரவாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தவெகவுக்கு வாக்களித்துவிட்டு தற்போது ஒற்றுமை பற்றி பேசுவதா? என கேள்வி எழுப்பியது, இரு தரப்புக்கும் இடையிலான முரண்பாடு முற்றியுள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியது.
புகைந்துகொண்டிருந்த அதிருப்தி நெருப்பில் எண்ணெய் வார்க்கும் விதமாகவே, நவம்பர் 21ம் தேதி வெளியான வேலுமணியின் அறிக்கை அமைந்திருக்கிறது. கொடிபிடிக்கும் தொண்டன்தான் இயக்கத்தின் ஆணிவேர். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என தலைமைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் வேலுமணி.
மேலும், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் இணைந்து பயணிக்க முயன்றபோதும் தலைமை உதாசீனப்படுத்தியதால்தான் இன்றைக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
நாளை நமதே...
இறுதியாக, ’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே,’ என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளை குறிப்பிட்டு ஒருங்கிணைப்புக்கான குரலை உரக்க ஒலித்திருக்கிறார் வேலுமணி.
தற்போதைய சூழலில், அதிமுக அதிகார மையத்திற்குள் இருவேறு அரசியல் கணக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. அதிகார கடிவாளத்தை தனது கையில் மட்டுமே இறுக்கமாக வைத்திருக்க விரும்பும் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமை அணுகுமுறை ஒருபுறம், பழைய தலைவர்கள் மற்றும் பிரிந்து சென்றவர்களை உள்ளே கொண்டுவந்து, மாவட்ட அளவிலான அதிகார பகிர்வையும் கோரும் வேலுமணி அணியின் நிலைப்பாடு மறுபுறம் என உரசல் உச்சத்தை எட்டியிருக்கிறது.
அமைதியாக இருந்த அதிருப்தி அணி மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், வேலுமணி வீசியிருக்கும் இந்த வார்த்தை கணை அவரது தனிப்பட்ட ஆவேசமா? அல்லது அதிருப்தி நிர்வாகிகளின் கூட்டு புரட்சிக்கான முன்னோட்டமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அதேநேரம், இபிஎஸ் தரப்பு இதற்கு பதிலடி கொடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா? அல்லது கட்சியின் எதிர்காலம் கருதி மீண்டும் ஒரு சமரச பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வீடியோவில் காணலாம்