மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
இந்த அனுமதி, இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக அரசு மேல் முறையீடு
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கார்த்திகை தீப நாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரியும், தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்கு எதிராகவும் ராம ரவிக்குமார் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு
மேல்முறையீட்டு மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துக் கூறி இருப்பதாவது;
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது. இதனை இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதக்கூடாது.
விளக்கேற்ற நிபந்தனைகள்
தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விளக்கு ஏற்றுவதற்கு செல்ல முடியும். பொதுமக்கள் செல்ல முடியாது. தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதிக்கு நன்றி - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்திற்கு முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி என அண்ணாமலை கூறி உள்ளார்.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம் என்றும் உத்தரவுகளை மதித்து, இடையூறுகளின்றி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வீடியோவைக் காண...