வஜ்ரவேல் எனப்படும் வேலாயுதம் கொண்டு சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானை, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிரும் முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அகந்தை, ஆணவம், செருக்கு, தீய எண்ணம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்த சூரபத்மனை தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெற்றி வேல் கொண்டு வதம் செய்த சூரசம்ஹார நிகழ்ச்சியின் சிலிர்க்க வைக்கும் காட்சிகள், மெய் மறக்க வைத்தன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா கடந்த 10ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. திருச்செந்தூரில் செந்திலாண்டவர் என்ற திருப்பெயரில் அருள்பாலித்து வரும் முருகப்பெருமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் தோன்றி அருள்மழை பொழிந்து வந்தார். இந்நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் மெய்சிலிர்க்க நடைபெற்றது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திரண்டு வந்த முருக பக்தர்களால், செந்தூர் கடற்கரை முழுவதும் ’கடலா, கடல் அலையா,’ என வியக்கும் வண்ணம் மனிதத் தலைகளாக காட்சியளித்தன.
வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செந்திலாண்டவர், பல்லக்கில் பவனி வர, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் விஞ்சும் வகையில் பக்தர்கள், ’கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா,’ என பக்தி பெருக்குடன் முழக்கமிட்டனர்.
அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம்
யானை முகம், சிங்க முகம் என அடுத்தடுத்து உருமாறி தலையாட்டியபடி வந்து போரிட்ட சூரபத்மனை, சக்தியின் அம்சமாக விளங்கும் வேலுடன் வதம் செய்தார் முருகப்பெருமான்.
இறுதியில் சொந்த முகத்தோடு ஆக்ரோஷமாக போரிட்ட சூரபத்மனை, வஜ்ரவேல் எனப்படும் வேலாயுதம் கொண்டு வதம் செய்தார் வெற்றிவேலன். அவரை போரில் வெல்ல முடியாது என உணர்ந்த சூரபத்மன் மாமரமாக மாறி தப்ப முயலவே, அதனை தனது சக்திவேல் கொண்டு இரண்டாக பிளந்தார். சக்திவேல் பாய்ந்ததும், சூரபத்மனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் தோன்றியது.
பகைவனுக்கும் அருளும் காருண்ய மூர்த்தி என்றும், வைதாரையும் வாழவைப்பவர் என்றும் போற்றப்படும் முருகப்பெருமான், சூரனை அழிக்க விரும்பாததால், இரண்டாக பிளந்த மாமரத்தின் ஒரு பாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும் மாற்றி சூரபத்மனை ஆட்கொண்டார்.
தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளிய முருகனுக்கு, பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. கடந்த 6 நாட்களாக சஷ்டி விரதமிருந்த பக்தர்கள், சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
வெறும் புராண நிகழ்வாக மட்டுமில்லாமல் தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டுவதன் அடையாளமாகக் கருதப்படும் சூரசம்ஹார விழா, மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி நல்ல சிந்தனைகளுடன் வாழ வேண்டும் என்ற ஆன்மிகப் பாடத்தையும் உணர்த்துகிறது என்றால் மிகையாகாது.