எதிர் அணியை கலங்க வைக்கும் சிறப்பான ஆட்டத் திறன் இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓரம் கட்டப்படுவது, கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் எதிரொலித்துள்ளது.
அனுபவம் மிக்க வீரர்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் தீரமிக்க ஆட்டத்தால் இந்தியா முன்னிலை பெற்றாலும் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து சமாளித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் ஜடேஜா உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐயமாக எழுந்துள்ளது.
கண்டன குரல்கள்
குறிப்பாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இடம்பெறாதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக, ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர். முகமது சிராஜ் என்ற பெயர் இருப்பதாலேயே அவர் இந்தியாவுக்காக விளையாட அனுமதிக்கப்படவில்லையா? எனவும் கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.
சிறந்த கிரிக்கெட் வீரர்
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த முகமது சிராஜ், பாக்சிங் டே டெஸ்ட் என்ற போட்டியில் அறிமுகமான நிலையில், இந்திய பந்துவீச்சை தலைமையேற்று வழி நடத்தி வரும் அளவுக்கு ஆட்டத் திறனை கொண்டவர். 2024 மற்றும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற முகமது சிராஜ் இந்தாண்டிற்கான விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றிருக்கிறார்.
காங். எம்பி கேள்வி
சிராஜ் போன்ற அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் இருந்திருந்தால், கடைசி நேர நெருக்கடியைச் சமாளித்து இந்திய அணி வெற்றியை பதிவு செய்திருக்க வாய்ப்புள்ளது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம் பெறாததற்கான காரணம் அவரது மதம் தானா? என காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கேள்வி எழுப்பி சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, விளையாட்டிலும் வாக்கு வங்கி மற்றும் மதவாத அரசியலை புகுத்துவது வெட்கக்கேடானது என காட்டமாக பதிலளித்தார். இதில் எந்த மத பாகுபாடும் இல்லையென அமைச்சர் கிரன் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார்.
முகமது சிராஜ் விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்திருப்பது கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
வீடியோவை காணலாம்