விளையாட்டு

மீண்டும் ரோகித் கையில் மும்பை இந்தியன்ஸ்

19 வருட ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது மும்பை அணி நிர்வாகம்.

Azhagiri Arumugam

ஹர்திக் பாண்டியா கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு அணியில் எழுந்த சர்ச்சைகள், ரசிகர்களின் அதிருப்தி, டிரெஸ்ஸிங் ரூம் ஒற்றுமை குறித்த கேள்விகள் என பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் ரோஹித்தின் மறுவருகை மும்பை அணிக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்குமா?

மீண்டும் மும்பை கேப்டனான ஹிட்மேன் ரோஹித் சர்மா

காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக, ஹிட்மேன் ரோஹித் சர்மா மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா, நேரடியாக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதனால் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா கேப்டன், பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மும்பை வான்கடே மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் எதிர்ப்பையும் கேலியையும் சந்தித்தார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் எதிர்ப்பு

ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர் அணியில் இருக்கும்போது புதிய கேப்டனாக ஹர்திக் பொறுப்பேற்றதால், அணியின் தலைமைப் பொறுப்பு மற்றும் வீரர்களுக்கிடையேயான நம்பிக்கை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

முன்னாள் வீரர்களும் டிரெஸ்ஸிங் ரூமில் ஒவ்வொரு வீரரின் நம்பிக்கையையும் பெறுவது கேப்டனுக்கு முக்கியம் என்று ஹர்திக் பாண்டியாவின் தலைமையை விமர்சித்து கருத்தும் தெரிவித்திருந்தனர்.

2026 ஐபிஎல் தொடரில் 9வது இடம் பிடித்தது

2024ஆம் ஆண்டு ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. 2025ஆம் ஆண்டு 4வது இடம் பிடித்து முன்னேற்றம் கண்டாலும், 2026ஆம் ஆண்டு மீண்டும் 9வது இடத்திற்குச் சென்றது.

இப்படியான சூழலில் மீண்டும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்திருப்பது மும்பை அணிக்கு முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

அணிக்கு கூடுதல் பலம்

ஏனென்றால் ரோஹித் சர்மாவுக்கு அணியில் உள்ள பல வீரர்களுடன் நீண்டகால விளையாட்டு அனுபவம் இருக்கிறது. பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது.

வீரர்களின் திறமையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற பொறுப்புகளை வழங்குவது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது, போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பது போன்றவற்றில் ரோஹித்துக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. மேலும் தற்போது அணியின் தலைமைப் பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் இருப்பதால், அவருடனான ரோஹித் சர்மாவின் நீண்டகால நட்பும், நல்ல புரிதலும் அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

2013 முதல் 2023 வரை மும்பை அணியை வழிநடத்திய ரோஹித், 158 போட்டிகளில் 87 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.

எனவே ரோஹித்தின் வருகையால் அணிக்குள் மீண்டும் நம்பிக்கையும் ஒருங்கிணைப்பும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

ரோஹித் அனுபவம்

கேப்டன் மீது வீரர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, களத்தில் அவர்களின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரோஹித் சர்மாவின் அனுபவம் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம். அதேபோல் பும்ரா போன்ற அனுபவமிக்க வீரர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்தி அணியின் வியூகங்களை வலுப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

இளம் வீரர்களுக்கு வழிகாட்டி

மேலும், கடந்த 3 சீசன்களாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் மாறியுள்ள நிலையில், அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கு வந்திருப்பதும் பந்துவீச்சுப் பிரிவுக்கு புதிய பலமாக அமையலாம்.

ஆனால் ரோஹித் மீண்டும் கேப்டனானதால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. வீரர்களின் ஃபார்ம், உடற்தகுதி, அணித் தேர்வு, சரியான வியூகம் எனப் பல விஷயங்கள் வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றன.

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள், 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பேரார்வத்தில் காத்திருக்கின்றனர்.