தமிழ்நாடு

"குற்றம் செய்பவர்களில் 80% தவெகவினர்" - உதயநிதி புகார்

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களில் 80 சதவீதம் ஆளுங்கட்சியினர் ஈடுபடுவதாக உதயநிதி குற்றம் சாட்டி உள்ளார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Azhagiri Arumugam

ஆளுநருடன் சந்திப்பு

இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது;

திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்தித்து, இந்த சோப்ளாங்கி ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் – சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளே காரணமாக இருந்து வருவதையும் சுட்டிக்காட்டி புகார் மனு அளித்தோம்.

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை இதுவரை கைது செய்யாத நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க இந்த அரசிற்கு ஆளுநர் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

சட்டநடவடிக்கை தேவை

116 நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், நீதிமன்றம் சொல்லும் வரை அதன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. தலைமைச் செயலாளர், தான் பெற்ற புகாரை முதலமைச்சரிடம் சொன்னாரா? அப்படி சொல்லி இருந்தால் முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாகவும், இந்த சம்பவத்தில் உண்மையில்லை - புகார் வரவில்லை என்று சொன்ன சட்ட அமைச்சர் போன்றவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை தேவை.

மிகப்பெரிய சவாலாக ஆளுங்கட்சியினர்

மனு கொடுக்க சென்றவரை அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் ரவிசங்கர் மீது நடவடிக்கை வேண்டும். ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், காணாமல் போகும் குழந்தைகள், தொடரும் காவல் நிலைய மரணங்கள், போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இப்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு மிகப்பெரிய சவாலாக இந்த ஆளுங்கட்சியினர் இருந்து வருகின்றனர்.

எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

வீடியோவைக் காணலாம்