மதுபான விலை 
தமிழ்நாடு

மதுபான விலை உயர்வா? அமைச்சர் விளக்கம்

தமிழகம் முழுவதும் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் விக்னேஷ், பாட்டிலுக்கு வசூலிக்கப்படும் 10 ரூபாய் தனி நபர் கைக்கு செல்வதை தடுக்கவே MRPல் மாற்றம் செய்திருப்பதாக விளக்கம் அளித்தார். பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் டாஸ்மாக் துறையில் செல்லரித்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழலுக்கு ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

வருமானம் புரளும் இடம்

வருமானம் கொழிக்கும் நம்பர் ஒன் இடம் என்றால் அது டாஸ்மாக் நிறுவனம் தான். அதே சமயம் டாஸ்மாக்கில் ஊழலுக்கும் பஞ்சமே இல்லை. கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் பல முறைகேடுகள் அரங்கேறியதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே, நீதிமன்ற உத்தரவுபடி படிப்படியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வந்தது.

காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது, கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த 10 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

தவெக ஆட்சியில்

பாட்டிலுக்கு 10 ரூபாய்

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாயை நிறுத்த முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. வார்னிங்கை மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் ஆளாகினர்.

ஆனாலும், பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதை முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை.

மதுபான விலை உயர்வா?

இந்த சூழலில் மதுபானங்களின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மதுபானங்கள் விலை உயர்வு என தகவல் பரவியது. சென்னை தலைமைச் செயலகத்தில் மது விலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். அப்போது, மதுபானங்கள் விலை உயர்த்தப்படவில்லை என திட்டவட்டமாக கூறினார்.

காலி பாட்டில்

காலி பாட்டில்கள்

இதுநாள் வரை பாட்டிலின் எம்.ஆர்.பி. விலையில் இருந்து கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாய் தான், காலி பாட்டிலுக்கான தொகையாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், 100 சதவீத வாடிக்கையாளர்களும் காலி பாட்டில்களை திரும்பி ஒப்படைக்கப்படுவது இல்லை.

இதுகுறித்து கூறிய அமைச்சர் விக்னேஷ், 55 சதவீதம் முதல் 60 சதவீதம் காலி பாட்டில்கள் மட்டுமே திரும்பி ஒப்படைக்கப்படுகின்றன என்றார்.

சுமார் ரூ.1,600 கோடி

அதாவது, பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் மூலம் மாதம் 300 கோடி ரூபாய் வசூல் ஆகும் நிலையில், ஆண்டுக்கு 3,200 கோடி ரூபாய் கிடைக்கிறது என்றார். ஆனால், 40 சதவீத பாட்டில்கள் திரும்பி வராத நிலையில், அந்த பாட்டில்களுக்கான சுமார் 1600 கோடி ரூபாய் பணம் தனிநபர்கள் பாக்கெட்டுகளுக்கு செல்வதாக பகீர் கிளப்பினார்.

எம்ஆர்பி விலை

எம்ஆர்பி விலையில் ரூ.10

அந்த வகையில், கோடிக்கணக்கான ரூபாய் ஊழலை தடுக்கவே, புதிய எம்.ஆர்.பி., முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு குவாட்டர் பாட்டிலின் விலை 140 ரூபாய் என்றால் 10 ரூபாயோடு சேர்த்து 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை எம்.ஆர்.பி. விலை என்பது 140 ரூபாய் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இனிமேல் 10 ரூபாயும் சுற்றுச்சூழல் வரி என்ற பெயரில் எம்.ஆர்.பி.யில் சேர்க்கப்பட்டு, 150 ரூபாய் என எம்.ஆர்.பி.யில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கூடுதல் தொகைக்கு...

காலி பாட்டில்களை திரும்பி ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாய் திரும்பி கொடுக்கப்படும். ஒப்படைக்கப்படாத பாட்டில்களுக்கான 10 ரூபாய் தனிநபர் பாக்கெட்டுகளுக்கு இல்லாமல் அரசின் கஜானாவுக்கு சென்றடையும். ஒப்படைக்கப்படாத பாட்டில்களுக்கான 10 ரூபாய் மூலம் அரங்கேறி வந்த கோடிக்கணக்கான ஊழல் புதிய முறை மூலம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.

இதன்படி, மதுபாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய முடியும். எந்தக் காரணத்தைக் கூறியும் கூடுதல் தொகை வசூலிக்க முடியாது.

விலை உயர்வுக்கு விளக்கம்

நவம்பர் ஒன்றாம் தேதி முதல்

புதிய எம்.ஆர்.பி., நடைமுறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், இன்னும் சில மாற்றங்களும் டாஸ்மாக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, ஒரு வாடிக்கையாளர் 1000 ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் வாங்க விரும்பினால் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும். கையில் பணமாக கொடுத்து வாங்க முடியாது என்ற திட்டமும் அமலுக்கு வந்துள்ளது.