தமிழ்நாடு

அர்ஜூன் புகார் - பயில்வான் ரங்கநாதனிடம் 6 மணி நேரம் விசாரணை

நடிகர் அர்ஜூன் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த புகாரில் யூடியூப்பர் பயில்வான் ரங்கநாதனிடம் 6 மணி நேரம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தியது. சினிமா பிரபலங்களை வம்புக்கு இழுத்து வாய்க்கு வந்ததெல்லாம் அள்ளி விடும் பயில்வானுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Azhagiri Arumugam

கிசுகிசு பேசுவதற்கு கின்னஸ் சாதனை கொடுக்க வேண்டும் என்றால் அது பயில்வான் ரங்கநாதனுக்கு தான் கொடுக்க வேண்டும். சினிமா பிரபலங்களை பற்றி கிசுகிசு பேசியே கிளுகிளுப்பாக செல்வ செழிப்பாக வாழ்ந்து வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு சென்னை போலீஸ் கட்டம் கட்டியிருக்கிறது.

அதிர்ச்சி அறிக்கை

பிரபல நடிகர் அர்ஜூன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார்.

ஐஸ்வர்யா - உமாபதி ராமைய்யா தம்பதியின் திருமண வாழ்க்கை குறித்தும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் யூகங்கள் பரவிய நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்ட அர்ஜூன், எந்த ஆதாரமும் இல்லாமல் தனது மகள் மதுவுக்கு அடிமையானவர் என சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள் எனவும், அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியிருந்தார்.

பயில்வான் ரங்கநாதனிடம் விசாரணை

அர்ஜூனின் புகாரில் முதல் ஆளாக யூடியூப்பர் பயில்வான் ரங்கநாதனை சென்னை சைபர் கிரைம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.

காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து 6 மணி நேரம் பயில்வான் ரங்கநாதனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அடுத்து எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் தவறாமல் வர வேண்டும் என்று அறிவுறுத்தி பயில்வான் ரங்கநாதனை காவல் துறை அனுப்பி வைத்திருக்கிறது.

வாயை வைத்தே பிழைப்பு

ஆரம்பத்தில், சினிமாவில் சைடு ஆக்டராக இருந்த பயில்வான் ரங்கநாதன், யூடியூப்பில் கடையை திறந்து கண்டெண்டுக்காக பல நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பலிகடாவாக்கினார். பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப் பாய்வது இது முதன்முறை அல்ல. சினிமா பிரபலங்களை பற்றி கிசுகிசு பேசுவது தான் பயில்வான் ரங்கநாதனின் ஆஸ்தான தொழில். சுருக்கமாக சொல்லப்போனால் வாயை வைத்தே பிழைப்பு நடத்துவதில் நம்பர் ஒன்.

கைது செய்ய வேண்டும்

நடிகர்கள், நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை யூடியூப்பில் பேசிப் பேசியே கொள்ளை வருமானம் பார்த்து கொழுத்து போயிருக்கும் பயில்வானுக்கு எதிராக, 2022ம் ஆண்டே ஒரு புகார் வந்தது. கொஞ்சம் கூட இங்கீதம் இல்லாமல் இல்லாததையும், பொல்லாததையும் நடிகர், நடிகைகள் குறித்து வாய்க்கு வந்தபடி அளந்து விடும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என ராதிகா, சுசித்ரா என பல நடிகைகள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

ரங்கநாதனுக்கு இடைக்காலத்தடை

இனிமேல் நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என நடிகர் சங்கம் வார்னிங்கும் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், படம் குறித்து செய்தியாளர் சந்திப்போ, புரமோஷன் நிகழ்ச்சிகளோ நடந்தாலும் அங்கும் ஆளுக்கு முதலில் அட்டெண்டன்ஸ் போட்டு படக்குழுவினரிடம் உரண்டை இழுப்பது தான் பயில்வானின் பாணி.

தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திவ்யா சத்யராஜ் குறித்து பேச பயில்வான் ரங்கநாதனுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

வாய்ப்பூட்டு போடப்படுமா?

இதுவரைக்கும் கொடுக்கப்பட்ட புகார்களில் இருந்து தப்பித்து வரும் பயில்வான் ரங்கநாதன், நடிகர் அர்ஜூன் அளித்த புகாரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். பல திரை பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை முதலீடாக வைத்து அநாகரீகமாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதனின் வாய்க்கு இனிமேலாவது பூட்டுப் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முழு நேரமும் அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்த்தால் சொந்த வீட்டை போலீஸ் தட்டி சுபயோகமாக கவனிக்கும் என்பது இனிமேலாவது பயில்வான் ரங்கநாதனுக்கு புரியட்டும்.

வீடியோவில் காணலாம்