ஹெராயின், மெத்தபெட்டமைன், செம்மரங்கள் என அடுத்தடுத்து பெருமளவில் சிக்கும் சம்பவங்கள் தேசிய அளவில் எதிரொலித்து வருகிறது. சென்னையில் ஐஸ் வண்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பிடிபட்டதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய நிதியமைச்சகம், இந்தாண்டு நாட்டிலேயே அதிகளவாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் என கூறியதையடுத்து, தமிழ்நாட்டுக்குள் DRI மிக வீரியத்துடன் செயல்படுகிறது.
தமிழ்நாட்டுக்குள் சுழன்று சுழன்று ரெய்டு வேட்டையில் அதிரடி காட்டும் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை, Directorate of Revenue Intelligence தந்திரமாக உளவு செய்து கடத்தல் பொருட்களை பிடித்து வரும் அதிகாரிகளால், கடத்தல் கும்பல் நடுக்கத்தில் உள்ளது.
தமிழ்நாட்டிற்குள்...
சமீபகாலமாக சென்னை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள், செம்மரங்கள், தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் மத்திய அரசின் DRI ரெய்டு வேட்டையில் சிக்கியிருப்பது உற்றுநோக்க வைத்திருக்கிறது.
சென்னை மாதவரம் அருகேவுள்ள மஞ்சம்பாக்கம் ரவுண்டானா வழியாக பெருமளவில் போதைப்பொருட்களை கொள்ளை கும்பல் கைமாற்றவுள்ளதாக வந்த சீக்ரெட் தகவலையடுத்து, கடந்த 17ஆம் தேதி, அங்கு பதுங்கியிருந்த அதிகாரிகள் நடமாடும் ஐஸ் வண்டிக்குள் 70 கிலோ ஹெராயினின் 69 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மதிப்பு ரூ.140 கோடி
ஐஸ்களை போலவே ஹெராயினை பேக்கிங் செய்து கூலிங் பாக்ஸுக்குள் அக்கும்பல் ஒளித்து வைத்திருந்ததை DRI அதிகாரிகள் தட்டித்தூக்கினர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த அந்த போதைப்பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட 140 கோடி ரூபாய் இருக்கும் நிலையில் அதிகாரிகளை ஆடிப்போக வைத்தது.
விதவிதமாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படும் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தை போல் கடந்த 9ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவிற்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படவிருந்த நிலையில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கின. சுங்கத்துறையின் வணிகத்தை எளிதாக்கும் செல்ஃப் சீலிங் என்ற முறையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அக்கும்பல் 'பேப்பர் லேமினேட் ரோல்கள்' சரக்கு என்ற பெயரில் 13,000 கிலோ உயர்தர செம்மரக் கட்டைகளை வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப முயன்றிருக்கிறது. இதன் மதிப்பு 7.72 கோடி ரூபாய் இருக்கும்.
நாகை, ராமநாதபுரத்திலும்...
கடந்த மாதம் நாகையிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 137 கிலோ கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் சிக்கின. கடல் மார்க்கமாக இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததை மோப்பம் பிடித்த அதிகாரிகள் கடத்தலை தடுத்து நிறுத்தி அதிரடி காட்டினர். அதேபோல் கடந்த 12ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 17.74 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்க கட்டிகளும் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக காரின் மூலம் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கீரனூர் அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுத்துப் போட்டனர்.
அப்போது சையது நபி கான் என்பவரிடம் ஒரு கிலோ 75 கிராம் எடையுள்ள 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் அதிகாரிகளின் கையில் சிக்கிய நிலையில், அது சென்னைக்கு கொண்டு செல்ல முற்பட்டதும் அம்பலமானது. இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.
கடந்த அக்டோபர், நவம்பரில் மட்டும் 5 ரெய்டுகளை நடத்தி வெற்றிகரமாக கடத்தல்களை தடுத்து நிறுத்தி மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அதிரடி காட்டியுள்ளது. சமீபகாலமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் நடந்தேறிய 5 ரெய்டுகளில் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதும், இலங்கையிலிருந்து கடத்தி வரப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.
நடப்பாண்டில் நாட்டிலேயே அதிகளவாக சென்னையில் 71 புள்ளி 24 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்தான் முதலிடத்தில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அடுத்தடுத்த கடத்தல் சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடியோவை காணலாம்