தமிழ்நாடு

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு - ஆ.ராசா அறிவிப்பு

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க உள்ளதாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்பிக்கள் கூட்டத்திற்கு பிறகு ஆ.ராசா அறிவித்தார்.

Azhagiri Arumugam

இதுகுறித்து ஆ.ராசா கூறி இருப்பதாவது;

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திடமான, தீர்க்கமான, ஆழ்ந்த சிந்தனையோடு தேசத்திற்கு எது நல்லது, தமிழ்நாட்டிற்கு எது நல்லது என்பதை நீண்ட விவாதத்திற்குப் பிறகு, இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல.

திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற போதும், ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போதும் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றினார்.

தேசத்திற்கு வழிகாட்டக்கூடிய முடிவு

சட்டமன்ற தீர்மானத்தில், அனைத்து கட்சிகளினுடைய ஒப்புதலோடு என்ன முடிவு எடுத்தோமோ, அந்த முடிவுக்கு ஏற்ப, அதற்குப் பிறகு முதலமைச்சராக இருந்து கொண்டே இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும், முதலமைச்சர்களையும் சென்னைக்கு அழைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழு என்கின்ற அந்தக் குழுவை அமைத்து, அதிலே தீர்க்கமாக ஒரு நாள் முழுக்க விவாதித்தோம்.

சில மாநிலங்களுடைய முதலமைச்சர்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுத்தோமோ அந்த முடிவுக்கு ஏற்ப, அதற்குப் பிறகு இந்த தவெக அரசு விஜய் தலைமையில் கொண்டு வந்த தீர்மானத்தில், அதே பங்களிப்பு குறையக் கூடாது என்கின்ற எங்களுடைய கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருக்கிற போதும், எதிர்க்கட்சியாக இருக்கிற போதும், கூட்டணியில் இருக்கிற போதும், கூட்டணியில் இல்லாத போதும் தேசத்திற்கே வழிகாட்டக் கூடிய ஒரே மாதிரியான ஒத்திசைவான முடிவை எடுத்துள்ளோம்

இன்றைய முடிவும்...

எந்த இடத்திலேயும் fair delimitation என்ற வார்த்தையைத் தவிர, நியாயமான தொகுதி மறு வரையறை என்பதைத் தவிர எந்த ஒரு புது யுக்தியையும் யாரும் அன்றைக்குச் சொல்லவில்லை.

நாங்கள் என்ன முடிவெடுத்தோமோ, எங்கள் முடிவுக்கு யார் யாரெல்லாம் கட்டுப்பட்டார்களோ, காங்கிரஸ் கட்சி உட்பட இந்தியா கூட்டணியில் இருக்கிற தலைவர்களும் உட்பட அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியும் எடுத்த முடிவுகளுக்கும் ஏற்பத்தான் இன்றைக்கு இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

அரசியல் நாகரிகம் அல்ல

திமுக, ஏதோ கூட்டணியிலே இல்லை என்பதற்காகப் பிரிந்து போய், ஒரு புதிய முடிவை எடுத்திருப்பதாகச் சித்தரிப்பது என்பது மிகக் கேவலமான அருவருப்பான செயல். அது அரசியல் நாகரிகம் அல்ல.

திமுகவைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தபோதும் ஆட்சியில் இல்லாதபோதும் ஒரே நிலைப்பாட்டில்தான் உறுதியாக இருந்தோம். அரசியல் சூழல் எப்படியிருந்தாலும், ஆட்சி அதிகாரம் யாரிடம் இருந்தாலும், தமிழ்நாட்டின் 7.18 சதவீதப் பங்கு பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருந்தோம்.

எந்த இழப்பும் கிடையாது

1971ல், இதே மாதிரி தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட போது எண்ணிக்கையில் இரண்டு குறைந்தது. இப்போது அந்த மாதிரி எந்த இழப்பும் கிடையாது. மிகச் சரியாக 7.18% என்பதற்குப் பதிலாக 7.21% என்ற அளவிலே கிடைத்திருக்கிறது. எனவே இதில் நஷ்டம் ஒன்றுமில்லை.

எங்கெங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ, அதை நாங்கள் விரிவாக நாடாளுமன்றத்திலே பேசுவோம்.

சிறுபான்மையினருக்காக போராடுவோம்

வேண்டுமென்றே இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை மனதிலே வைத்துக்கொண்டு gerrymandering, pick and choose அவர்களை ஓரப்படுத்த வேண்டும், அவர்களை உதாசீனப்படுத்த வேண்டும் அல்லது விளிம்பு நிலைக்குக் கொண்டு போக வேண்டும் என்கின்ற முயற்சியை இந்தச் சட்டப்பிரிவின் வாயிலாக எடுப்பார்களேயானால், அதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சியையும் நாணயமாக சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதியாக, நண்பனாக கண்டிப்பாகப் போராடுவோம்.

இவ்வாறு திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

வீடியோவைக் காணலாம்