கோவை நியூஸ்தமிழ்24x7
தமிழ்நாடு

போலி புத்தக விவகாரம் - அடுத்தடுத்து அதிரடி

போலி புத்தக விவகாரம் தொடர்பாக, அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் சென்னை அண்ணா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோவை பெரியார் அறிவுலகத்திலும் 4 மணிநேரமாக ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

Azhagiri Arumugam

இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கவும், உடனே வழக்குப்பதிவு செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலி புத்தகம்

பெரியார் அறிவுலகத்தில்...

கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை பார்த்து மனம்நொந்த எழுத்தாளர் பெருமாள் முருகனால், இந்த விவகாரம் அடுத்தடுத்து பூதாகரமாக வெடித்து கிளம்பியது. ஒரு நூலகத்தில் மட்டும் போலி புத்தகங்களை புகுத்தவில்லை, கன்னிமாரா நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், அண்ணா நூலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நூலகங்களில் அகல் விளக்கு பதிப்பக நூல்கள் உள்ளது தெரியவந்தது.

கள ஆய்வில்...

ஒரே அறையில், 3 பதிப்பகங்களை நடத்தி வந்த அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் வீட்டின் முன்பு களஆய்வில் ஈடுபட்ட நியூஸ் தமிழ் செய்திக்குழுவிடம் சில ஆவணங்கள் சிக்க, கூடவே வீட்டு வாசலிலேயே அவரும் சிக்கினார்.

பல கேள்விகளுக்கு, ’நோ கமெண்ட்ஸ்’ என சொல்லி எஸ்கேப் ஆனாலும் சில கேள்விகளுக்கு உண்மைகளை தான் கூறினார். அது, அதிகாரிகளின் அடுத்தகட்ட விசாரணைக்கு உகந்த ஒன்றாக மாறிய நிலையில் மீண்டும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவினர் மோகன் வீட்டுக்கு கள ஆய்விற்காக சென்றனர்.

அகல் விளக்கு

கதவை மூடிக்கொண்ட...

யார் கதவை தட்டினாலும் கை அளவுக்குக்கூட திறக்கக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்த மோகன், செய்திக்குழு பலமுறை அழைத்தபிறகே கதவை லேசாக திறந்தார். ”எங்கேயே கேட்ட குரல்” என உஷாரான மோகன், செய்தியாளருக்கு பதில் சொல்லக்கூடாது என்பதிலும் மிகத்தெளிவாகவே இருந்தார்.

அதன்படியே, ’அகல் விளக்கு பதிப்பாளர் நான்தான் அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், ஆனால் எனக்கும் புத்தக ஊழலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அதுகுறித்து தேவையான விவரங்களை வீட்டிற்கே வந்து விசாரித்த காவல்துறையிடம் கூறிவிட்டேன், Pls Pls No comments,’ எனக்கூறிவிட்டு கதவை மூடிக்கொண்டார்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

இதனிடையே, அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் சென்னை அண்ணா நூலகத்தில் டிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி இருந்த நிலையில் கோவை பெரியார் அறிவுலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி இமானுவேல் சேகரன் தலைமையில் சோதனை நடந்தது.

ஒவ்வொரு தளமாக சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், நிர்வாக அலுவலகத்தின் உட்புற கதவுகளை பூட்டி கொண்டு, அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பக நூல்கள் எப்போது வாங்கப்பட்டது? என்னென்ன புத்தகங்கள் வாங்கப்பட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

முக்கியப் புள்ளிகள்...

மேலும், நூலகத்திற்கு வாங்கியதாகக் கணக்குக் காட்டப்பட்ட புத்தகங்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் இருப்பு விவரங்கள், சர்ச்சைக்குரிய அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்களைக் கொள்முதல் செய்ய பரிந்துரைத்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் விவரங்கள், பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் தொகை மற்றும் அதற்கான ரசீதுகளின் உண்மைத் தன்மை ஆகியவை தொடர்பாக ​அறிவுலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்தி, போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து முக்கியப் புள்ளிகள் சிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றம் அதிரடி

இதுஒருபுறமிருக்க, புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் அதற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் தொடர்ந்த மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் உத்தரவு

அப்போது, அறிவுலக நூலகத்திற்கு அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? என்பன உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் குற்றவாளி தெரியாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டுமே எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.

வீடியோவைக் காண...