நூலகங்களுக்கு போலி புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்த அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, பின்னணியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்ற ஆழமான விசாரணையில் இறங்கியுள்ளது.
புத்தக கொள்முதல் விவகாரம்
கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. நூல் கொள்முதல் முறைகேடு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியது. எந்தெந்த நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன? கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், பரிவர்த்தனை விபரங்கள், நூல்களை தேர்வு செய்ய பரிந்துரைத்தவர்கள் யார்? யார்? என மொத்த தகவலையும் தோண்ட ஆரம்பித்தது லஞ்ச ஒழிப்புத் துறை.
ஏழு இடங்களில் ரெய்டு
இந்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனையில் இறங்கியது. அந்த வகையில், சென்னையில் அமைந்துள்ள அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அகல் விளக்கு பதிப்பகம் எப்போதில் இருந்து செயல்பட்டு வருகிறது? எத்தனை ஆண்டுகளாக போலி புத்தகங்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறித்து அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை நிறைவில் மோகன் வீட்டில் இருந்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அள்ளிச் சென்றனர்.
அதோடு, அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனின் மகள் பிரியதர்ஷினியையும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
அறிவுலகத்திலும் சோதனை
ஒட்டு மொத்த விவகாரத்திற்கும் ஆரம்பப்புள்ளியான பெரியார் அறிவுலகத்தில் 2வது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
நான்காவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி இமானுவேல் தலைமையில் 2 ஆய்வாளர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். ஒவ்வொரு அலமாரியிலும் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து, புத்தகத்தின் தலைப்பு, எழுத்தாளர் பெயர், புத்தகத்தின் விலை, வாங்கிய தேதி ஆகியவை குறித்து உன்னிப்பாக ஆய்வு செய்தனர்.
பெரியார் அறிவுலகத்திற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் வாங்கியதாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், தற்போது விசாரணையில் வெறும் 76 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே வாங்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதிலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் போலியானது என அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.
திருவாரூர், திருப்பத்தூர், தென்காசியிலும்...
இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட நூலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறதா? என்ற கோணத்தில் நூலக அதிகாரி கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
தென்காசியிலுள்ள மைய நூலகத்திலும் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், அங்கும் சோதனை நடத்தப்பட்டது. தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதர்
தலைமையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செயல்பட்டு வரும் அகல் விளக்கு பதிப்பகத்தின் அலுவலகத்திற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத் துறை, சல்லடை போட்டு சலித்தது. நூல் கொள்முதலுக்கு கைமாறிய தொகை எவ்வளவு? யார்யாருக்கு கை மாறியது? என்பது குறித்த ஆவணங்களை தேடி சோதனை நடத்தினர். மேலும், அகல் விளக்கு பதிப்பக அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்ட மைய நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ரெய்டு நடத்தினர். தமிழகம் முழுவதும் 7 இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், இறுதியாக அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனை கைது செய்தனர்.
மோகனை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, இன்னும் எத்தனை நூலகங்களுக்கு பொய்யான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது? போலி புத்தகங்களை நூலகங்களுக்கு விற்பனை செய்த பின்னணியில் எந்தெந்த அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது? யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? என்பது குறித்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை முடிவில் லஞ்ச ஒழிப்புத்துறையின் வேட்டையில் பல கருப்பு ஆடுகள் சிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.