தமிழ்நாடு

கைதிகள் எஸ்கேப், டிஜிபி மாற்றம், ஆக்சனில் தவெக அரசு

தேனி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 17 சிறைக் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில், சிறைத் துறை டிஜிபியாக இருந்த IPS அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் தூக்கியடிக்கப்பட்டிருப்பது காவல் வட்டாரத்தில் அனலை கிளப்பி உள்ளது.

Azhagiri Arumugam

கைதிகள் தப்பிய விவகாரம் தவெக அரசுக்கு களங்கமாக மாறி விட, காவலர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையோடு நின்று விடாமல், டிஜிபியின் டிரான்ஸ்பர் வரை சென்றிருக்க, பின்னணியில் என்ன நடந்தது?

அரசு நடவடிக்கை

17 கைதிகள் எஸ்கேப்

தேனி கிளைச் சிறையில் இருந்து, ஒரே நேரத்தில் கொத்தாக 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறையில் வலிப்பு வந்தது போல நாடகம் போட்டு கைதிகள் 17 பேரும் காவலர்களை தாக்கி விட்டு தப்பியோடிய நிலையில், சிறைப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது.

தப்பியோடிய கைதிகள் வெளியே வந்து ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்ற பதற்றம் தொற்றிக் கொள்ள, அடுத்த 36 மணி நேரத்தில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 17 பேரையும் போலீஸ் கைது செய்தது.

சஸ்பெண்ட் நடவடிக்கை

இந்த விவகாரத்தில் 9 சிறைக் காவலர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேனி சம்பவம் அரங்கேறிய இரண்டு நாட்களுக்கு முன்பு தான் புழல் மத்திய சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிய சம்பவமும் அரங்கேறியது.

தேனி தேக்கம்பட்டியில் இருப்பதாவது கிளைச் சிறை. குறைந்த அளவிலேயே காவலர்கள் இருப்பார்கள். ஆனால், புழல் மத்திய சிறையில் உச்சகப்பட்ட பாதுகாப்பு வளையத்தை மீறியும் 2 சிறைக் கைதிகள் டிமிக்கி கொடுத்து தப்பியோடியது ஒட்டு மொத்தமாக சிறை நிர்வாகத்தின் FAILURE-ஐயே வெளிப்படுத்தியது.

புழல் சிறை

சிறைத்துறை டிஜிபி மாற்றம்

சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் பொது மக்கள் மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. சிறை காவலர்கள் உடந்தை இல்லாமல் கைதிகள் தப்பியோடியிருக்க முடியாது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. சிறையில் இருக்கும் கைதிகளை போலீஸ் கண்காணிக்க தவறியது ஒரு பக்கம் இருக்க, தவெக அரசுக்கும் கைதிகள் தப்பியது நெருக்கடியாக மாறியது.

இந்த நிலையில் தான், சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை டிரான்ஸ்பர் செய்து உத்தரவு வந்திருக்கிறது.

அரசுக்கு அதிருப்தி

வழக்கமாக இது மாதிரி கைதிகள் தப்பினால் சிறைக் காவலர்கள், வார்டன் அளவிலேயே நடவடிக்கை நின்று விடும். ஆனால், சிறைத் துறையின் டிஜிபியவே மாற்றியிருக்கிறார்கள். புழல் சிறையில் இருந்து கைதிகள் தப்பிய போதே, டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அப்போதே உத்தரவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பிறகும் தேக்கம்பட்டி சிறையில் இருந்து கைதிகள் கூண்டோடு தப்பியது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது முதலமைச்சர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரி சங்கர்

இதனால், சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், மின்வாரிய நிறுவனமான டான்ஜெட்கோ நிறுவனத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி என்ற பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோரின் டிரான்ஸ்பர், காக்கி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடமையில் அலட்சியம் காட்டினால் எவ்வளவு பெரிய உயர் அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என காக்கிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மெசேஜ் தான் சந்தீப் ராய் ரத்தோரின் டிரான்ஸ்பர்.

சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அந்த பதவிக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த IPS அதிகாரி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி கமிஷ்னராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், போலீஸ் அகாடமியின் டிஜிபியாக இருந்திருக்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற சந்தீப் ராய் ரத்தோர், சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையம் மூலம் நியமனம் செய்யப்பட்டார்.

தவெக ஆட்சிக்கு வந்ததும் மகேஷ்குமார் அகர்வால் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டார். ஆனால், கைதிகள் தப்பியோடிய விவகாரம் ரத்தோருக்கு தலைவலியாக மாறி, டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.