அரசு கஜானாவில் திருட்டு 
தமிழ்நாடு

அரசு கஜானாவில் ரூ.22 கோடி டிஜிட்டல் சீட்டிங், பணம் மீட்கப்படுமா?

புதுச்சேரியை தொடர்ந்து, தமிழக அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி டிஜிட்டல் முறையில் சுருட்டப்பட்டுள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.

Azhagiri Arumugam

அமைதியின் புகலிடமான புதுச்சேரியில், டிஜிட்டல் திருட்டுவேலையை அரங்கேற்றிய அதே நைஜீரிய ஹேக்கர்களே தமிழ்நாட்டின் அரசு கஜானாக்களிலும் கை வைத்திருப்பதாக சந்தேகிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டுள்ளது? அந்தப் பணத்தை மீட்க முடியுமா? என்பது குறித்தும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

தமிழகத்திலும்

புதுச்சேரி, அடுத்து தமிழ்நாடு...

3ஆம் தேதி புதுச்சேரி, அடுத்த ஒரு வாரத்திலேயே தமிழ்நாட்டில் 3 இடங்கள். அடுத்து கோடிகளை குறிவைத்து எந்தெந்த இடங்களோ? ஹேக்கர்களின் பார்வை எங்கு திரும்புமோ? என்ற பயம்தான் வங்கி நிர்வாகம் மற்றும் அங்கு வரவு வைத்தவர்கள் என பலருக்கும் தொற்றி உள்ளது.

புதுச்சேரியில் என்ன நடந்தது?

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோருக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. தீபாவளியையையொட்டி அந்த 3 மாத சம்பளத்தையும் வழங்குவதற்காக கடந்த 3ஆம் தேதி இரவு ரூ.8.16 கோடி நிதி வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே கல்லூரி நிர்வாக வங்கி கணக்கில் இருந்த பணத்துடன் சேர்த்து ரூ.8.85 கோடி திடீரென மாயமானது. அதுவும், 3 மாத ஊதியம் வரவு வைக்கப்பட்ட 2 மணிநேரத்திலேயே டிஜிட்டல் முறையில் பணம் திருடுபோனது.

தாராபுரத்தில்

சைபர் கிரைம் விசாரணை

இதுகுறித்து, விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்துதான் மோசடி கும்பல் திருட்டு வேலையில் ஈடுபட்டதை கண்டறிந்ததோடு ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஹாஜாநஜூபுதீன் மற்றும் திருப்பூர் கொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த பசிரியா என்ற 39 வயது பெண்ணையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கமிஷனுக்காக மோசடிக்கு துணைபோனவர்கள் மட்டுமே. இவர்களுக்கு பின்னால் மெயின் ஹேக்கர்களாக நைஜீரிய கும்பல் இருப்பதாகவே தெரிய வந்துள்ளது.

தமிழகத்திலும் அதிர்ச்சி

ஆன்மீக நகரத்தில் இந்த டிஜிட்டல் சீட்டிங் நடந்த ஒரு வாரத்திலேயே தமிழ்நாட்டிலும் அதே ஃபார்மெட்டிலேயே அரசு கஜனானாவை குறிவைத்து மோசடி நடந்துள்ளது அதிர வைத்துள்ளது.

நைஜீரிய கும்பல்?

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14 கோடி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து ரூ.3.10 கோடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து ரூ.5 கோடி என 3 இடங்களில் மொத்தம் ரூ.22.10 கோடி மோசடி நடந்துள்ளது.

இவை அனைத்தும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வரும் அரசு நிதி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கணக்குகள் ஆகும். இந்தக் கணக்குகள் பெரும்பாலும் சென்னையிலிருந்து மையப்படுத்தப்பட்ட முறையில் இயக்கப்படுவதால், உள்ளூர் அலுவலகங்களில் உடனடிக் கண்காணிப்பு குறைவாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

வெளிநாட்டு கும்பல்

புதுச்சேரியில் எப்படி மருத்துவ கல்லூரி ஊழியர்களுக்கான 3 மாத ஊதியம் வரவு வைக்கப்பட்ட 2 மணிநேரத்தில் டிஜிட்டல் முறையில் திருடப்பட்டதோ அதேபோன்றுதான் தமிழ்நாட்டிலும் கருவூலத்தில் பணம் வரவு வைக்கப்பட்ட சிலமணிநேரத்திலேயே திருடுபோயுள்ளது. அதனால், 2 சம்பவங்களையும் ஒரே நைஜீரிய கும்பலே அரங்கேற்றி இருக்குமோ? என சந்தேகிக்கும் அதிகாரிகள் பங்களாதேஷ், அமெரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இணைய வழியாக ஊடுருவி பணம் திருடப்பட்டிருக்கலாமோ? எனவும் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் ஆய்வில்கூட வெளிநாடுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான அணுகல்கள் இருந்தது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டிஜிட்டல் திருட்டு

தொடரும் தீவிர விசாரணை

இந்நிலையில், அரசுத் துறை சார்ந்த பாதுகாப்பான கணக்குகளிலேயே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் திருடப்பட்டது எப்படி? பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது? நைஜீரிய கும்பலுக்கு துணைபோனவர்கள் யார் யார்? கமிஷனுக்கு ஆசைப்பட்டு அவர்கள் துணைபோனார்களா? அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் ஏடிஎம் கார்டுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைப் பயன்படுத்தி அரசுப் பணம் சுருட்டப்பட்டுள்ளதா?

ஹேக்கர்கள் எந்த ஐபி முகவரியைப் பயன்படுத்தி பணத்தை சுருட்டி உள்ளனர்? அந்த பணத்தை மீட்க முடியுமா? என தொடர்ந்து விசாரணையில் இறங்கி உள்ளனர் அதிகாரிகள்.