தமிழ்நாடு

ஏழு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி நடுங்க வைத்த தமிழ் சிங்கப்பெண்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எமனாக திகழ்ந்து, 7 பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் தமிழ்நாடடில் பிறந்த ஐ.பி.எஸ். அதிகாரி திவ்யா தேவ்.

Azhagiri Arumugam

எல்லைப்புறப் பகுதியான சோபோரில் எஸ்பியாகப் பொறுப்பேற்று, அப்பகுதியில் பல ஆண்டு காலப் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இவரது வீரமும் வியூகமும் பேசு பொருளாகி உள்ளது.

எஸ்பி

கோவையில் இருந்து...

கோவையைச் சேர்ந்த திவ்யா, 2018ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். படுகர் இனத்தைச் சேர்ந்த திவ்யாவின் தந்தை தேவேந்திரன் கோவை மாநகரப் போலீஸில் எஸ்.ஐ.யாக பணியாற்றியவர். 2018ஆம் ஆண்டு பேட்ச் AGMUT கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார் திவ்யா தேவ்.

ஜம்மு-காஷ்மீரின் மிகவும் பதற்றமான மற்றும் எல்லைப் பகுதியாக இருக்கும் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில், இதுவரை ஆண் அதிகாரிகளே கோலோச்சிய சவாலான மாவட்ட எஸ்பி பொறுப்பை ஏற்று வரலாறு படைத்தார் திவ்யா.

கெடுபிடியான பாதுகாப்புச் சூழல் நிலவி வந்த இந்தப் பகுதியில், தனது திறமையாலும், துணிச்சலாலும், தீவிரவாத நெட்வொர்க்குகளின் வேர்களைத் தகர்த்தார்.

திவ்யா தேவ்

திவ்யா தலைமையில்...

குறிப்பாக, இவரது நேரடித் தலைமையில் சோபோரின் நவுபோரா மற்றும் ரஃபியாபாத்தின் ஹாடிபோரா பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றி பெற்றனர்.

இந்த அதிரடித் தாக்குதல்களில், பாதுகாப்புப் படையினரின் மோஸ்ட் வாண்ட்டடாக இருந்த A++ கேடகரியைச் சேர்ந்த முக்கியத் தளபதிகள் சைஃபுல்லா, அபு உஸ்மான் மற்றும் அபு உமர் உள்ளிட்ட 7 பயங்கரமான வெளிநாட்டுத் தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இத்தகைய ஆபத்தான இலக்குகளை திட்டமிட்டு அழித்ததில் இவரது வியூகம் மிக முக்கியப் பங்காற்றியது.

வரலாற்று மைல்கல்

களத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியது மட்டுமல்லாமல், மாநிலப் புலனாய்வு அமைப்பின் எஸ்பி-யாக இவர் பணியாற்றிய காலகட்டத்தில், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதில் தனது புலனாய்வுத் திறமையை நிரூபித்தார்.

குறிப்பாக, பல காலமாக முடங்கிக் கிடந்த 1990களில் நடந்த சர்லா பட் பாலியல் வன்கொடுமை மற்றும் கொ* வழக்கை தூசி தட்டி மறுவிசாரணை செய்தார். இவரது தொடர் உழைப்பால், அந்த வழக்கில் 737 பக்கங்களுக்கு விரிவான மற்றும் வலுவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, நீதித் துறையில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

திவ்யா தேவ்

ஒரே பெண் அதிகாரி

தேசத்தின் பாதுகாப்புக்காகவும், சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகவும் இவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், 2026ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சார்பில் வீரத்திற்கான உயரிய Gallantry Medal திவ்யா தேவ்க்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம், ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இந்த உயரிய விருதைப் பெற்ற ஒரே பெண் காவல்துறை அதிகாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாத எதிர்ப்புக் களத்தில் அஞ்சா நெஞ்சத்துடன் பணியாற்றித் திரும்பிய ஐ.பி.எஸ். அதிகாரி திவ்யா தேவ், தற்போது புதுச்சேரியில் மூத்த காவல் கண்காணிப்பாளராகத் தனது மக்கள் சேவையைத் தொடர்ந்து வருகிறார்.

பெண் நினைத்தால் எத்தகைய அச்சுறுத்தல்களையும் வீழ்த்தி எல்லையிலும் முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு திவ்யா தேவின் சாதனை மிகப்பெரும் உதாரணம்.