தமிழ்நாடு

"TNPSC மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையே இல்லை"

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை," என டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Azhagiri Arumugam

'திரிஷா விஜய்' என்ற போலி எழுத்தாளரின் படைப்பு என கூறப்படும் புத்தகத்திலிருந்து ஒருவேளை கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு என்ன பதிலை எழுத முடியும்? தயிர்சாதம் தொடர்பான கேள்விகள் போட்டித்தேர்வில் அவசியமா? தயிர்சாதத்திற்கும் அரசு நிர்வாகத்திற்கும் என்ன சம்மந்தம்? என அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

’பொய் சொல்வதில் வல்லவர்கள்’

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லையெனவும், தேர்வாணையத்தின் செயல்பாடுகள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுநர் நடராஜ் பேசியபோது, "2017ல் 20 லட்சம், 2022ல் 22 லட்சம்பேர் விண்ணப்பித்திருந்த இடத்தில் தற்போது அது 15 லட்சமாக சுருங்கி உள்ளது அதேநேரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொய் சொல்வதில் வல்லவர்கள்," என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

மேலும், தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் எந்தெந்த புத்தகங்களில் இருந்து எடுக்கப்படுகின்றன என்பது குறித்த தெளிவான தகவல்கள் எப்போதாவது வெளியிடப்பட்டுள்ளதா? 'திரிஷா விஜய்' என்ற பெயரில் குறிப்பிடப்படும் போலி எழுத்தாளர் எழுதியதாகக் கூறப்படும் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு எந்த பதிலை சொல்வது? என கேள்வி எழுப்பினார்.

என்ன சம்மந்தம்?

அதேபோல், பொது ஆங்கிலப் பாடம் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் இடம் பெற்றுள்ளதால் அதுவும் மாணவர்களுக்கு பெரும் சவாலாகவே இருப்பதாக கூறிய பயிற்றுநர் நடராஜ், தமிழ் புலவர்களே தேர்வெழுதினாலும் முழு மதிப்பெண் பெற இயலாமல் புலம்பித் தான் ஆக வேண்டும் என்ற அளவுக்குதான் வினாக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும், உருதுமொழியில் பகலாபாத் என்றால் தயிர்சாதம் என அர்த்தம். அதையெல்லாம் தேர்வில் கேள்வியாக கேட்பது சரியா? அரசு நிர்வாகத்திற்கும் தயிர் சாதத்திற்கும் என்ன சம்மந்தம்? என நொந்து கொண்டார்.

என்ன சிக்கல்?

வினாத்தாள்களிலேயே ஆயிரம் எழுத்துப்பிழைகள், அதில் தேர்வு முடிந்தவுடன் விடைக்குறிப்புகளை வெளியிடுவதில் என்ன பிரச்சினை? முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்கூட தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண் விவரங்களையும் வெளிப்படையாக வெளியிடுவதில் என்ன சிக்கல்? எனவும் கேள்வி எழுப்பினார் நடராஜ்.

மேலும், குரூப்-1, குரூப்-2 போன்ற உயர்நிலைப் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தில் தேர்வெழுதுபவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும், தமிழில் தேர்வெழுதுபவர்களுக்கு சிறிய எழுத்துப்பிழை, சந்திப்பிழை, ஒற்றுப்பிழை போன்றவற்றுக்குக்கூட அதிக மதிப்பெண்கள் குறைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆங்கில வழி தேர்வர்களுக்கு...

கடந்த ஆண்டு குரூப்-1 தேர்வில் சுமார் 75 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் ஆங்கில வழியில் தேர்வெழுதியவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய பயிற்றுநர், தமிழ் வழி இடஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெற்றவர்களில்கூட 14 பேர் ஆங்கிலத்தில் தேர்வெழுதியதாகவும், அப்படியானால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டின் நோக்கம் முழுமையாக நிறைவேறுகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசுப் பணிகளில்...

இப்படி பல கேள்விகள், பல முரண்கள் இருப்பதாலேயே டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும், அதனால்தான் இளைஞர்கள் பலரும் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்குத் தயாராக முன்வரத் தயங்குவதாகவும் கூறும் பயிற்றுநர்கள், மாறாக தனியார் நிறுவனங்களில் வேலை தேடுவது, அல்லது மத்திய அரசுப் பணிகளுக்கான எஸ்.எஸ்.சி., ரயில்வே, வங்கித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராவது என்ற முடிவுக்கு செல்வதாகவும் கூறுகின்றனர்.

முறையான சீர்திருத்தம் வேண்டும்...

மொத்தத்தில், தேர்வு அறிவிப்பு வெளியிடுவது முதல் வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு நடத்துதல், விடைக்குறிப்பு வெளியிடுதல், மதிப்பீடு செய்தல், தேர்வு முடிவுகளை அறிவித்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவுக்கு முக்கிய வாயிலாக விளங்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மீது தேர்வர்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க, தமிழக அரசு முழு கவனம் செலுத்தி, முறையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயிற்றுநர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.