தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் அடிக்கும் ஆடம்பர லூட்டிகள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை ஈர்த்து வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து முதலமைச்சருடன் வணிக ஒப்பந்தம் பேசுவது போன்ற கற்பனை AI வீடியோ நெட்டிசன்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கண்களைக் கவரும் ஏஐ
பறவைகளும், விலங்குகளும் மனிதர்களை போல பந்தாவாக வலம்வரும் இந்த டிஜிட்டல் காலகட்டத்தில், இன்ஸ்டா இன்டர்நெட் உலகின் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இந்த வெள்ளை சிங்கம் தலையும், கோட் சூட் உடையும் கொண்ட ஷேரு பாய்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை திறந்தால் போதும், ஷேரு பாயின் கெத்துதான் இன்டர்நெட் ஹெட்லைன். இந்த உலகத்தையே மொத்தமாக விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து வைத்துள்ளேன் பாஸ் என்று கூலாக கோட்-சூட்டை உதறிவிட்டு இவர் இறங்கும் அந்த ஸ்டைல் இணையத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு கார்ப்பரேட்டுகள், தனிப்பட்ட சொகுசு விமானங்கள், உலகம் முழுக்க பரவியிருக்கும் பிரம்மாண்ட வர்த்தக சாம்ராஜ்யம் என ஷேரு பாய் செய்யும் லூட்டிகளுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
எங்களது ராஜ்ஜியம் தான்
ஷேரு பாய் மட்டுமின்றி, அவருடன் டைகர் பாய், சாந்து பாய் என ஒரு பெரிய கூட்டணியே இந்த இணைய உலகை ஆட்சி செய்கிறது. விலங்கு முகங்களுடன் ஆடம்பர விடுதிகளில் கோட்-சூட் அணிந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகளும், சிவப்பு கம்பள வரவேற்புகளும் காண்போரை சிரிக்க வைக்கின்றன.
பழைய பாம்பு கிராபிக்ஸ் ரீல்ஸ்களும் மெதுவான நடனங்களும் மலையேறிவிட்டன. இனி இன்ஸ்டாகிராமில் எங்களது ராஜ்ஜியம்தான் என பறைசாற்றும் விதமாக, இவர்களது ஒவ்வொரு பதிவும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை குவித்து வருகிறது.
நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் துணையோடு உருவாக்கப்படும் இந்த அனிமேஷன் கதைகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளன.
சிரிப்பலை... சிரிப்பலை...
இந்த AI உலகத்திற்கும் நிஜ அரசியலுக்கும் என்ன தொடர்பு என்ற கலகலப்பான விவாதமும் சோஷியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது, சமூக வலைதளங்களில் பரவும் அந்த கற்பனை ரீல்ஸில், ஷேரு பாய் நேராக தலைமை செயலகத்திற்குள் நுழைந்து, தமிழக முதலமைச்சரை சந்தித்து அதிரடி வணிக ஒப்பந்தம் பேசுகிறார் என்ற ஒரு மிரட்டலான AI காணொலி நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவின் ஹைலைட்ஸ் என்னவென்றால், தலைமைச் செயலகத்தில் ஷேரு பாய் கால் பதித்ததும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஒரே நொடியில் கொடுத்து உதவுவதாக AI சிங்கமான ஷேரு பாய் கம்பீரமாக பேசும் அந்த பாவனைகள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன.
இதை பார்த்து கலகலத்துப்போன நெட்டிசன்கள், ஷேரு பாய்க்கும் தலைமைச் செயலகத்திற்கும் இவ்வளவு பெரிய தொடர்பா? என்று மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அரசியல் வட்டாரங்களிலும் இந்த வைரல் AI கலாச்சாரம் தற்போது ஜாலியான விவாத பொருளாகியுள்ளது.
இப்படி கொழுக்கு மொழுக்கு தோற்றத்தில் ஒட்டுமொத்த உலகத்தையும் தன் விரல் நுனியில் ஆட்டிவைக்கும் ஷேரு பாய் செய்யும் அட்ராசிட்டிகள் இன்ஸ்டாகிராமை கலகலக்க செய்துள்ளது.
இன்றைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ட்ரெண்டின் உச்சம் ஷேரு பாய் மட்டும்தான். அடுத்ததாக ஷேரு பாய் என்ன செய்யப் போகிறார்? சந்திர மண்டலத்தில் இடம் வாங்க போகிறாரா அல்லது நிலவையே வாங்க போகிறாரா? என இவரது அடுத்தகட்ட அதிரடிகளுக்காக சமூக வலைதள பயனர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.