பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தைக் கடந்து, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களிலேயே மிக அதிக தூரம் பயணித்த விண்கலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது வாயேஜர் விண்கலம். இது அறிவியலின் உச்சமா? அல்லது பிரபஞ்சத்தின் முன் எல்லாமே தூசு என்பதை உணர்த்தும் பாடமா?
24 மணி நேரத்தில்...
பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை நம்மால் சாதாரண கிலோமீட்டர் கணக்குகளில் அளவிட முடியாது. அதனால்தான் விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தை அளவுகோலாகப் பயன்படுத்துகின்றனர். வெற்றிடத்தில் ஒளி ஒரு முழு நாளில், அதாவது 24 மணி நேரத்தில் கடக்கும் தூரமே ஒரு ஒளி நாள் எனப்படுகிறது.
2026 நவம்பர் 18ஆம் தேதி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி 46 நிமிடங்களுக்கு, நாசாவின் வாயேஜர்-1 விண்கலம் பூமியிலிருந்து 2,590 கோடி கிலோமீட்டர், அதாவது ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டிச் சாதனை படைத்துள்ளது.
இனி பூமியிலிருந்து நாம் அனுப்பும் ஒரு சிக்னல் வாயேஜரைச் சென்றடையவே ஒரு நாளுக்கு மேல் ஆகும்.
1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, வியாழன் மற்றும் சனி கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசாவால் ஏவப்பட்டது தான் வாயேஜர்-1. 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, சூரியனிலிருந்து சுமார் 600 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது, விஞ்ஞானி கார்ல் சாகனின் யோசனைப்படி வாயேஜர் தன் கேமராவைத் திருப்பி பூமியைப் புகைப்படம் எடுத்தது.
சூரியக் கதிர்களுக்கு இடையே ஒரு சிறிய புள்ளியாக, வெறும் ஒரு பிக்சல் அளவிலேயே பூமி அதில் தெரிந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் புகைப்படத்திற்கு பேல் ப்ளூ டாட் எனப் பெயரிடப்பட்டது.
அந்தப் புகைப்படத்திற்குப் பிறகு, மின்சாரத்தைச் சேமிப்பதற்காக வாயேஜரின் கேமராக்கள் நிரந்தரமாக அணைக்கப்பட்டன.
அந்தப் புகைப்படத்தைக் கண்ட வானியலாளர் கார்ல் சாகன், நாம் நேசிப்பவர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், வரலாற்றில் வாழ்ந்த அனைவருமே சூரியக் கதிரில் மிதக்கும் இந்தச் சிறிய தூசியில்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மனிதனின் அகந்தை எவ்வளவு அர்த்தமற்றது என்பதை உணர்த்தும் அந்தப் புகைப்படம், நமது ஒரே வீடான இந்தப் பூமியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் நமக்கு நினைவூட்டியது.
2012 ஆகஸ்டில் சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டி விண்மீன்களுக்கு இடையிலான வெளியான இன்டர்ஸ்டெல்லார் பகுதிக்குள் நுழைந்த வாயேஜர்-1, இப்போது பூமியே கண்களுக்குத் தெரியாத அளவுக்கு 2,600 கோடி கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
நாசா அழைப்பு
இந்த வரலாற்றுச் சாதனையைக் கொண்டாடும் விதமாக, உலக மக்கள் அனைவரும் வானத்தை நோக்கித் தங்கள் அன்பின் சிக்னல்களை அனுப்புமாறு நாசா அழைப்பு விடுத்துள்ளது.
வாயேஜர்-1 விண்கலத்தின் இந்தப் பயணம், மனிதனின் அறிவியல் சாதனையைப் பறைசாற்றும் அதே வேளையில், பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் நாமும், நம் பூமியும் ஒரு துளிகூட இல்லை என்ற நிதர்சனத்தையும் உரக்கச் சொல்லியுள்ளது.
வீடியோவில் காணலாம்