வர்த்தகம்

200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு - 2 லட்சம் வேலைவாய்ப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 200 நாட்களுக்குள், மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழியாக ரூ.1.73 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

Azhagiri Arumugam

இதன் மூலம் 1,98,557 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி; அவற்றைச் செயல்படுத்துவதில் வேகம்; அதன் பலனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூகநீதி, இதுவே தமிழ்நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கான சரியான பாதை. அந்தப் பாதையில் தவெக அரசு நடைபோடுகிறதா?

6 மாதங்களில் இரண்டாவது வெற்றி முதலீடு மாநாடு

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு எவ்வளவு முதலீடு வருகிறது? எத்தனை புதிய தொழிற்சாலைகள் உருவாகின்றன? எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன? தொழில் வளர்ச்சி தலைநகரைத் தாண்டி மற்ற மாவட்டங்களுக்கும் பரவுகிறதா? என்பதுதான் முக்கியமான அளவுகோல்கள். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு – முதலீடு மற்றும் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநாடு' (Vettri Tamil Nadu – Investment and Conversion Conclave 2026) கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த மாநாட்டில் கையெழுத்தான 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.58,214 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொடங்கப்பட்ட 15 புதிய திட்டங்களுக்கு ரூ.7,925 கோடி முதலீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 19,965 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1,430 கோடி முதலீட்டில் நிறைவடைந்த ஆறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 1,710 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்த மூன்று அறிவிப்புகளையும் ஒன்றாகப் பார்த்தால், ஒரே மாநாட்டின் மூலம் ரூ.67,569 கோடி முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, 87,461 வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உலக நிறுவனங்களின் விரிவாக்கம்: நம்பிக்கையின் அடையாளம்

முதலீட்டாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு நீண்டகால முக்கியத்துவம் கொண்டவை.

* ராயல் என்ஃபீல்டு: இந்தியாவிலேயே முதல்முறையாக மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டத்துக்காக ரூ.1,000 கோடி முதலீடு. 500 வேலைவாய்ப்புகள்.

* டிவிஎஸ் மோட்டார்: கிருஷ்ணகிரியில் ரூ.2,000 கோடி முதலீடு. 1,000 வேலைவாய்ப்புகள்.

* டபிள்யூ.இ.ஜி. (WEG): தருமபுரியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்மோட்டார்கள், தானியங்கி அமைப்புகள், கட்டுப்பாட்டுக் கருவிகள் தயாரிக்கும் ஒருங்கிணைந்த தொழிற்சாலை. 3,000 வேலைவாய்ப்புகள். பிரேசிலுக்கு வெளியே அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த உற்பத்தி மையமாக இது அமையவிருக்கிறது.

* டைட்டன்: கிருஷ்ணகிரியில் மின்னணுவியல் துறையில் ரூ.1,500 கோடி முதலீடு. 3,000 வேலைவாய்ப்புகள்.

* ஜே.கே. ஃபென்னர்: சிவகங்கையில் ரூ.900 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை. 1,650 வேலைவாய்ப்புகள்.

* சன்மார் குழுமம்: தூத்துக்குடியில் கப்பல் கட்டும் துறையில் ரூ.1,950 கோடி முதலீடு. 950 வேலைவாய்ப்புகள்.

* அப்பல்லோ டயர்ஸ்: ராணிப்பேட்டையில் ரூ.1,100 கோடி முதலீடு. 900 வேலைவாய்ப்புகள்

இந்த முதலீடுகளின் மிக முக்கியமான அம்சம், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுதான். அரசின் செய்திக்குறிப்பின்படி, 78 ஒப்பந்தங்களும் 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. தொழில்துறையில் பின்தங்கிய சிவகங்கை, தருமபுரி, விருதுநகர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் முதலீடுகள் செய்யப்பட உள்ளன.

இந்த மாவட்டங்களில் மட்டும் 18 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.17,413 கோடி முதலீடும் 16,411 வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் முதலீட்டு வேட்டை: தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட சவால்

தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்பைப் பற்றிப் பேசும்போது, அண்மையில் ஆந்திரப் பிரதேசம் பெற்ற முதலீடுகளைப் புறக்கணித்துவிட முடியாது. ஆந்திரா புதிய தொழில்துறை வாய்ப்புகளுக்காகத் தீவிரமாகப் போட்டியிடும் மாநிலமாக மாறியுள்ளது. இந்தப் போட்டிக்கு மத்தியில், தமிழ்நாடும் தனது முதலீட்டு ஈர்ப்புத் திறனை மீண்டும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நவம்பர் 25 அன்று வெளியான ரூ.58,214 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் அந்த வகையில் முக்கியமானவை.

ஆனால், இந்த இரண்டு மாநிலங்களின் முதலீட்டு அறிவிப்புகளையும் வெறுமனே தொகை அடிப்படையில் ஒப்பிட்டுவிட முடியாது. ஆந்திராவின் சமீபத்திய முதலீடுகளில் மிகப்பெரிய பங்கு தரவு மையங்கள் போன்ற மூலதனம் அதிகம் தேவைப்படும், ஆனால் நேரடி வேலைவாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவாக உருவாக்கக்கூடிய திட்டங்களில் இருக்கிறது. தமிழ்நாட்டின் புதிய ஒப்பந்தங்களோ வாகன உற்பத்தி, மின்னணுவியல், ஜவுளி, கனரகப் பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கப்பல் கட்டுதல், தளவாடப் போக்குவரத்து எனப் பல துறைகளில் பரவியிருக்கின்றன.

அதாவது, முதலீட்டுத் தொகையை ஈர்ப்பதோடு, வேலைவாய்ப்பையும் தொழில்துறைச் சங்கிலியையும் ஒரே நேரத்தில் விரிவுபடுத்தும் முயற்சியைத் தமிழ்நாடு முன்னெடுத்திருக்கிறது. இதுவே இந்த முதலீட்டு அறிவிப்புகளின் முக்கியத்துவம்.

வீடியோவைக் காணலாம்