வர்த்தகம்

தங்கத்தின் விலை மேலும் குறையுமா? இனி என்ன ஆகும்?

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது ஏன் கீழே இறங்குகிறது? இன்னும் எவ்வளவு சரியும்? என பல கேள்விகள் எழும் நிலையில், இந்த மார்க்கெட் ஆட்டத்துக்கு பின்னால் ஓடும் கணக்குகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Azhagiri Arumugam

காலையில் எழுந்து பேப்பரை புரட்டும்போதும், செல்போனில் நோட்டிபிகேஷன் 'டிங்' என அடிக்கும்போதும் தங்கம் விலை ஏறியிருக்கிறதா, இறங்கியிருக்கிறதா என பார்ப்பதுதான் தற்போதைய டிரெண்ட்.

நகை கடை வாசல்களில் கூடும் கூட்டமும், கரெக்டா இப்ப பார்த்து இப்படி இறங்குதே என முணுமுணுக்கும் நடுத்தர வர்க்கத்தின் குரல்களும், இன்னும் கொஞ்சம் இறங்கினால் மொத்தமாக தூக்கலாம் என காத்திருக்கும் முதலீட்டாளர்களின் கணக்குகளும் சேர்ந்து தங்க சந்தையை பரபரப்பு களமாக மாற்றியிருக்கிறது.

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்...

விலை ஏறினால் அதிர்ச்சி, இறங்கினால் ஆச்சரியம். சர்வதேச சந்தையில் தங்கமும், வெள்ளியும் கடிவாளம் இல்லாத குதிரைகளாக எகிறி குதித்துவிட்டு, திடீரென பிரேக் பிடித்து நிற்கின்றன. சமீபத்திய தங்கத்தின் தடாலடி சரிவு, முதலீட்டாளர்களையும், நகை வாங்க காத்திருப்பவர்களையும் ஒருசேர நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.

உலகில் போர் மேகங்கள் சூழ்ந்தால், அரசியல் குழப்பங்கள் வெடித்தால் அல்லது பொருளாதார நெருக்கடி எட்டி பார்த்தால், முதலீட்டாளர்களின் முதல் தஞ்சம் தங்கமாகத்தான் இருக்கிறது. பங்குச்சந்தையைவிட தங்கமே பாதுகாப்பானது என்ற எண்ணம் மேலோங்கும்போது, தேவை அதிகரித்து விலையும் உயரும்.

இதனுடன் சேர்ந்து, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது இன்னொரு பெரிய காரணம். குறிப்பாக, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தை கூட்டும்போது, சர்வதேச சந்தையில் தேவை பன்மடங்கு உயர்ந்து விலையை மேலே தள்ளுகிறது.

அமெரிக்காவின் வட்டி விகிதம்

இதற்கு அடுத்த முக்கியமான காரணம் அமெரிக்க டாலர். சர்வதேச சந்தையில் தங்கம் டாலரில் தான் கணக்கிடப்படுகிறது. டாலரின் மதிப்பு சரியும்போது, மற்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது எளிதாகிறது. அப்போதும், தேவை கூடி விலை உயரும்.

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகும் போதும் தங்கத்தின் பக்கம் முதலீடுகள் திரும்பும். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர வாய்ப்பு ஏற்படுகிறது. அதேபோல், அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு உருவானாலும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கலாம்.

வைத்திருப்போர் விற்றால், விலை குறையும்

இவ்வளவு காரணங்களால் ஏறிய தங்கம் தற்போது ஏன் குறைகிறது? இதற்கான முக்கியமான காரணம் அமெரிக்காவின் வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புதான்.

அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve வட்டியை குறைக்காமல் இருக்கலாம் அல்லது வட்டி உயர்வாகவே தொடரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டால், டாலர் வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. அப்போது, தங்கத்தைவிட வட்டி வருமானம் தரும் முதலீடுகள் கவர்ச்சிகரமாக தோன்றும். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்ய தொடங்குவார்கள். விற்பனை அதிகரித்தால் தங்கத்தின் விலை குறையும்.

இன்னொரு விஷயம், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தால், ஏற்கனவே குறைந்த விலையில் தங்கம் வாங்கிய முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்யத் தொடங்குவார்கள்.

இதைத்தான் Profit Booking என்கிறோம். அதாவது, தங்கத்தை விற்று லாபத்தை பணமாக மாற்றுவது. ஒரே நேரத்தில் பல முதலீட்டாளர்கள் இப்படி செய்யும்போது தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்படலாம். சமீபத்திய தங்கம், வெள்ளி சரிவிலும் இந்த விற்பனை அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தங்கத்தின் விலை குறையுமா?

அப்படியென்றால் தங்கம் விலை இனிமேல் குறையுமா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. டாலர் தொடர்ந்து வலுப்பெற்று, அமெரிக்க வட்டி விகிதமும் உயர்ந்தே இருந்தால், முதலீட்டாளர்களின் விற்பனை தொடரலாம், விலையும் மேலும் சரிய வாய்ப்புண்டு என்கிறார்கள்.

ஆனால், உலகில் போர் பதற்றம் கூடினாலோ, பொருளாதார சிக்கல் வந்தாலோ, மத்திய வங்கிகள் மீண்டும் தங்கத்தை குவித்தாலோ விலை திரும்பவும் ஏறவே செய்யும். அதனால், விலை தொடர்ந்து குறையும் என்று அடித்து சொல்ல முடியாது என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

இந்தியாவை பொறுத்தவரை இன்னொரு கணக்கும் இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால், அதன் தாக்கம் உள்ளூர் விலையில் எதிரொலிக்கும்.

அதோடு இறக்குமதி வரி, GST நகைக்கடைகளின் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேரும்போது, சர்வதேச வீழ்ச்சிக்கு ஏற்ப நகை விலையும் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள்.

தங்கத்தின் நிஜக்கதை

இது வெறும் சந்தை கணக்கு மட்டுமல்ல. நமது வீட்டு கல்யாண கனவுகளோடும் பின்னி பிணைந்தது. மகளுக்கு கல்யாணம், இன்னும் கொஞ்சம் விலை குறையட்டும் என காத்திருக்கும் அப்பாக்களும், நாளைக்கு என்ன ஆகுமோ? இப்பவே வாங்கி வெச்சிடலாம் என தவிக்கும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சவரன் குறையும்போது முகத்தில் மலரும் புன்னகையும், ரெண்டு சவரன் ஏறும்போது நெஞ்சில் கனக்கும் பாரமும்தான் தங்கத்தின் நிஜக்கதை.

வீடியோவில் காண...