வழக்கமாகத் தொழில்துறையினருக்குச் சாதகமான அறிவிப்புகளையும் உறுதிமொழிகளையும் வழங்கும் பிரதமர், இம்முறை அதே தொழில்துறைத் தலைவர்களை நேரடியாகக் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியிருக்கிறீர்களா? ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறீர்களா? என்று நிறுவனங்களை பார்த்து பிரதமர் எழுப்பியிருக்கும் கேள்விகள் சாதாரணமானவை அல்ல.
வரிச் சலுகைகள் எங்கே போயின? உற்பத்தித் துறையில் ஏன் தேக்கம்?
2019ஆம் ஆண்டு மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கான அடிப்படை வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தது. புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு மேலும் குறைவான வரி விகிதமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் நோக்கம் தனியார் முதலீடுகளை அதிகரிப்பது, உற்பத்தியை விரிவுபடுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பதாகும். அதேபோல, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சலுகைகள் அனைத்தும் பொருளாதாரத்தில் முதலீட்டையும் நுகர்வையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டவை. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஃபிக்கி (FICCI) Federation of Indian Chambers of Commerce & Industry எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
அப்போது, "மோடி ஜி, நீங்கள் எல்லாவற்றையும் செய்யுங்கள்; நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்" என்ற தொனியில் தொழில்துறையினர் செயல்படுவதாக அவர் விமர்சித்திருக்கிறார். பிரதமர் தனது உரையில் குறிப்பாக உற்பத்தித் துறையின் மந்தமான முன்னேற்றத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பிரதமர் தனது உரையில் எழுப்பிய மற்றொரு முக்கியமான பிரச்சினை, உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் தொடர்பானது. வெளிநாட்டுச் சந்தைகளுக்கு உயர்தரப் பொருட்களை அனுப்பும் நிறுவனங்கள், இந்தியாவில் விற்பனை செய்யும்போது அதே தரத்தைப் பராமரிப்பதில்லை என்ற விமர்சனத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.
"நம்மிடம் 140 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இதுவே சில நேரங்களில் உங்களுக்குப் பிரச்சினையாக மாறிவிடுகிறது. இந்திய மக்களுக்கும் நல்ல தரமான பொருட்களைப் பெற உரிமை இல்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது மிகவும் முக்கியமான விமர்சனம்.
பிரதமர் தனது உரையில் மகாத்மா காந்தியையும் நினைவுகூர்ந்திருக்கிறார். 1930ஆம் ஆண்டில் காந்தி தொழில்துறையினரிடம் சுதேசி மற்றும் தற்சார்பு குறித்து வலியுறுத்தியதையும், நூறு ஆண்டுகளைக் கடந்த பிறகும் அதே கருத்துகளைத் தான் சொல்ல வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இது தொழில்துறையினரின் வெற்றியா அல்லது தோல்வியா?" என்ற அவரது கேள்வி தொழில்துறையினர் மீது வெறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்: வாய்ப்பா, சவாலா?
இந்தியா பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்டுவரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும் (FTA) பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
அதே நேரத்தில், வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச் சந்தைக்குள் எளிதாக நுழைவதற்கும் வழிவகுக்கின்றன. இதனால் இந்திய நிறுவனங்கள் தரம், விலை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள தொழில்துறையினர் தயாராக இல்லை என்று பிரதமர் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, விவசாயம், உணவுப் பதப்படுத்துதல், மருந்து உற்பத்தி, பொறியியல் பொருட்கள் போன்ற துறைகளில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
"12 ஆண்டுகளில் முதல்முறையாகப் பதற்றமும் கலக்கமும் அடைந்த பிரதமர் தொழில்துறைத் தலைவர்களைக் கடிந்துகொண்டிருக்கிறார்" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மேலும், ஊதியங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. வரி விகிதங்கள் குறைக்கப்பட்டும் முதலீடுகள் பெருமளவில் அதிகரிக்கவில்லை. தேவையான வேகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என காங்கிரஸ் நீண்டகாலமாக முன்வைத்துவரும் மூன்று குற்றச்சாட்டுகளையே பிரதமர் இப்போது ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
இருப்பினும் FICCI நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி எழுப்பிய கேள்விகள் இந்தியத் தொழில்துறையினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. வரிச் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் அதற்கேற்ப முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஊதிய உயர்வு ஆகியவற்றிலும் தங்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
பெரு நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கிறது; நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தொடர்கிறது. ஆனால் அந்த வளர்ச்சிக்கு ஏற்ப உழைக்கும் மக்களின் ஊதியமும் வாழ்க்கைத் தரமும் உயர்கிறதா? பிரதமர் தொழில்துறையினரிடம் எழுப்பிய கேள்வியைவிடவும், இந்தியப் பொருளாதாரம் இன்று எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வி இதுதான்
வீடியோவாக பார்க்கலாம்...