அமெரிக்கா நியூஸ்தமிழ்24x7
உலகம்

அமெரிக்க தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வி - பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா வெற்றி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் வெற்றி, தோல்விகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.

Azhagiri Arumugam

குறிப்பாக, குடியரசுக் கட்சியின் முக்கிய முகமாகவும் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆதரவாளராகவும் அறியப்பட்ட விவேக் ராமசாமி ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்தார். அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா, சுஹாஸ் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் வெற்றியைத் தக்க வைத்துள்ளனர்.

இந்திய வம்சாவளியினர் அமெரிக்க அரசியலில் இரு கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், இந்தத் தேர்தல் அவர்களுக்குக் கலவையான முடிவுகளைத் தந்திருக்கிறது.

தோல்வி

விவேக் ராமசாமி தோல்வி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர் விவேக் ராமசாமி. கேரளாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த இவர், 2024 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வுப் போட்டியில் டிரம்புக்கு எதிராகப் போட்டியிட்டு பின்னர் விலகினார். அதன்பிறகு டிரம்பின் தீவிர ஆதரவாளராக மாறினார்.

2026ல் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். டிரம்பே நேரடியாக அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனாலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஏமி ஆக்டனிடம் தோல்வியடைந்தார். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் விவேக் ராமசாமி தோல்வியைத் தழுவியுள்ளார்.

வெற்றியைத் தக்கவைத்த இந்திய வம்சாவளியினர்

கலிபோர்னியாவின் 3வது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, எட்டாவது முறையாக அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளார், அமி பேரா(Ami Bera). இவர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றும் இந்திய வம்சாவளியினரில் ஒருவர்.

இதேபோல, கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலி பகுதியை உள்ளடக்கிய 17வது தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார், ரோ கண்ணா (Ro Khanna).

குடியரசுக் கட்சியின் இந்திய வம்சாவளி வேட்பாளர் ரிதேஷ் தாண்டனைத் தோற்கடித்து, ரோ கண்ணா ஆறாவது முறையாக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்.

அமெரிக்க இடைக்கால தேர்தல்

ஆறாவது முறையாக வெற்றி

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரமிளா ஜெயபால் (Pramila Jayapal), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அரசியல்வாதிகளில் முக்கியமானவர். அவர், வாஷிங்டன் மாகாணத்தின் 7வது தொகுதியில் வெற்றி பெற்று ஆறாவது முறையாகப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளார்.

விர்ஜீனியா மாகாணத்தின் 10வது தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார், சுஹாஸ் சுப்பிரமணியம் (Suhas Subramanyam). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், விர்ஜீனியாவிலிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தேர்வான முதல் இந்திய அமெரிக்கர் ஆவார்.

புளோரிடாவின் 22வது தொகுதியில் குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி அஸ்கரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார், பியா தண்டியா (Pia Dandiya). முன்னாள் பள்ளி முதல்வரான இவர், முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறார்.

மேரிலாண்ட் மாகாணத்தின் துணை ஆளுநராக மீண்டும் தேர்வாகியுள்ளார், அருணா மில்லர் (Aruna Miller). ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த இவர், சிறுவயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்.

கேரளத்தில் இருந்து

தோல்வியைச் சந்தித்த இந்திய வம்சாவளியினர்

விவேக் ராமசாமியைத் தவிர, நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சாரிதா கொமத்ரெட்டி, ஜனநாயகக் கட்சியின் லெட்டீஷியா ஜேம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார். கலிபோர்னியாவின் 17வது தொகுதியில் ரோ கண்ணாவிடம் ரிதேஷ் தாண்டன் தோல்வியடைந்தார். வாஷிங்டனின் 7வது தொகுதியில் பிரமிளா ஜெயபாலிடம் நிரவ் ஷேத் தோல்வியடைந்தார்.

வடக்கு கரோலினாவின் 4வது தொகுதியில் மகேஷ் கனோர்கரும் தோல்வியைச் சந்தித்துள்ளார். அமெரிக்க செனட் தேர்தலில் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிவா அய்யாதுரையும் வெற்றி பெறவில்லை.

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் வளர்ச்சி

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக வசிக்கின்றனர். தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி, தொழில்துறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வரும் இந்தச் சமூகத்தினர், இப்போது தேர்தல் அரசியலிலும் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 57 பேர் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். இவர்களில் ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி குடியரசுக் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய வம்சாவளியினர்

இந்திய வம்சாவளியினரின் குரல்

குறிப்பாக, வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதேநேரத்தில், அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்பு இரு கட்சிகளிலும் விரிவடைந்து வருகிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் இந்த அரசியல் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் உண்டு. குடியேற்றக் கொள்கை, எச்-1பி விசா, இந்திய மாணவர்களின் கல்வி, வர்த்தகம், வெளியுறவுக் கொள்கை போன்ற விவகாரங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் கவனிக்கப்படும்.