Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் உப்பனாற்றின் நடுவே அமைந்துள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் நிறைந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இறால் குட்டைகள் மற்றும் உப்பனாற்றின் வழியே உட்பகுந்த கடல் நீரால் கிராமத்தின் நிலத்தடி நீரும் முற்றிலுமாக உப்பு நீராக மாறியதால் பயனற்றுப்போனது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கை பம்புகள்,வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு என அனைத்து வசதிகள் இருந்தும் முறையாக குடிநீர் மட்டும் வழங்கப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 8 நாட்களுக்கு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அதுவும் ஐந்து அடி முதல் எட்டு அடி வரை ஆழம் குடித் தோண்டி அதற்குள் செல்லும் குழாயில் இறங்கி தண்ணீர் பிடிக்கும் அவல நிலை இருந்து வருகிறது.

ஒருசில நாட்களில் 15 நாட்கள் கூட தண்ணீர் வராத நிலை உள்ளதால் தண்ணீரை பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் தொட்டிகளில் சேமித்து வைத்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் தங்களது குடிநீர் தேவைக்காக கிராம மக்கள் அடுத்தடுத்த கிராமங்களுக்கு சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பள்ளம் கிராத்தின் குடிநீர் தேவைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பயனற்று கிடப்பதாக தெரிவிக்கும் கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த நிலையில் ஒரு கைப்பம்பு மட்டும் அமைக்கப்பட்டதாகவும் அதுவும் சில நாட்களிலேயே பழுதடைந்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே தங்கள் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு இணைப்பு வழங்கி தங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved